பேருந்துகளை இயக்க முடியாது…. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டம்
Omni Bus Strike : தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருடன் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து கேராளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயங்காது என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பாண்டிச்சேரி (Puducherry) ஆகிய அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகளை (Omni Bus) இயக்க முடியாது என்ற முன்பு எடுக்கப்பட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கேரளா மாநில அரசு விதித்த அபராத நடவடிக்கையால், அண்டை மாநிலங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் நவம்பர் 10, 2025 முதல் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்னையை அரசு தலையிட்டு உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகள் இயங்காது
தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கேரளாவில் தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்படுவது நிறுத்தப்படும் வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது எனவும் உறுதியாக தெரிவித்துள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்கும் நோக்கில், நவம்பர் 11, 2025 அன்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருடன் பேருந்து உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், அந்த பேச்சுவார்த்தை எந்த ஒரு முடிவுக்கும் வராமல் தோல்வியில் முடிந்தது.
இதையும் படிக்க : தொடங்கும் சபரிமலை சீசன்.. தமிழகம் வழியாக செல்லும் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..




தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி விலக்கு
அமைச்சர் சிவசங்கருடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், தமிழ்நாட்டில் இயங்கும் ஆம்னி பேருந்துகளுக்கு சாலைவரி விலக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் விதிக்கப்பட்ட அபராதம் நீக்கப்படும் வரை, எந்த மாநிலத்துக்கும் பேருந்துகளை இயக்கமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனால், வேலை சார்ந்து அண்டை மாநிலங்களுக்கு பயணிக்க திட்டங்களுடன் இருந்த பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். அண்டை மாநிலங்களுக்கு பயணிக்க விரும்பும் மக்கள் தற்போது அரசு பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை நம்பியிருக்கும் நிலை உருவாகியுள்ளது. நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் போக்குவரத்து மற்றும் ஆம்னி பேருந்துகளை நம்பியிருந்த மக்கள் தற்போது ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.
இதையும் படிக்க : தாம்பரம் – எழும்பூர் இடையே ரயில் சேவை ரத்து.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..
ரயில் டிக்கெட் உடனடியாக கிடைக்காது, அதே நேரம் ஆம்னி பேருந்துகளை விட இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக விமான கட்டணங்கள் இருக்கும் என்பதால் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் இருக்கின்றனர். இதனையடுத்து அரசு தலையிட்டு இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.