நவ.16க்கு பிறகு மீண்டும் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. அலெர்ட் மக்களே!!
heavy rain alert: நவம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் முன்னறிவித்துள்ளது. அதேசமயம், நவ.16க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
சென்னை, நவம்பர் 10: வரும் நவம்பர் 16ஆம் தேதி முதல் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். அதேசமயம், தமிழகத்தின் வட மாவட்டங்கள், அதனையொட்டிய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி திருத்தம் நிலவுகிறது. அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. அதோடு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also read: தமிழகத்தில் இருந்து இன்று முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது.. பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை:
கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. கடந்த சில நாட்களாகவே மழையின் தீவிரம் சற்று குறைவாகவே இருக்கிறது. இந்நிலையில், எதிர் வரும் நாட்களில் தீவிரமடையும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறியுள்ளார். நவம்பர் 12, 13ஆம் தேதிகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும். இந்த மழை முதலில் தென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் தொடங்கி பின்னர் படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கு பரவும்.
குறிப்பாக சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரிக்கும். நவம்பர் மாத்தின் 4வது வாரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் அல்லது இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும். இது புயலாக மாறவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நவ.12, 13ல் கனமழைக்கு வாய்ப்பு:
முன்னதாக சென்னை வானிலை மையம் விடுத்த அறிவிப்பிலும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 12ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13, 2025 அன்று கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also read: குடியிருப்பு, வணிக இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் வசதி கட்டாயம்.. தமிழக அரசு உத்தரவு
24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் சிவகிரி, மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மதுரை விமான நிலையம், திருமங்கலம், கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் தலா 3; கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு, மதுரை நகரம், மதுரை வடக்கு, மேலுார், தல்லாகுளம், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதிகளில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.