Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கட்டுப்பாட்டை இழந்த கார்.. உயிரிழந்த கர்ப்பிணி.. திருச்சி அருகே நடந்த சோகம்..

Trichy - Namakkal Accident: திருச்சி அருகே முருகன் என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் முருகனின் மனைவி, நிறைமாத கர்ப்பிணியான திலகவதி உயிரிழந்தார், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த கார்.. உயிரிழந்த கர்ப்பிணி.. திருச்சி அருகே நடந்த சோகம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Aug 2025 08:06 AM

திருச்சி, ஆகஸ்ட் 7, 2025: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்காலுக்குள் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள எழில் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு வயது 38. இவர் திருவெறும்பூர் பி.எச்.இ.எல்லில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி திலகவதி (வயது 32) என்ற மனைவியும், அஸ்வினி (வயது 9), திருக்குமரன் (வயது 4) என இரு குழந்தைகள் உள்ளனர். இதில் திலகவதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார்.

கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது:

இந்த நிலையில் முருகன் தனது குடும்பத்தினருடன் சேலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் சென்றுவிட்டு நேற்று திருச்சிக்கு திரும்பி வந்துள்ளார். காரை முருகன் ஒட்டியுள்ளார். பின் இருக்கையில் மனைவி மற்றும் பிள்ளைகள் அமர்ந்திருந்தனர். திருச்சி மாவட்டம், துறையூர் அருகே நாமக்கல் – திருச்சி நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த அய்யன் வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

மேலும் படிக்க: அன்புமணி நடத்தும் பொதுக்குழு கூட்டம்.. தடை விதிக்க ராமதாஸ் உயர்நீதிமன்றத்தில் மனு..

அப்போது வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் சென்றதால் கார் மெல்ல மெல்ல தண்ணீரில் மூழ்கத் தொடங்கியது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட முருகன் கார் கண்ணாடியை உடைத்து பிள்ளைகள் இருவரையும் முதலில் காப்பாற்றியுள்ளார். இதற்கிடையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த திலகவதி உயிர் பயத்தில் கூச்சலிட்டவாறு தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

விபத்தில் உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணி:

பின்னர் திலகவதியை முருகன் காப்பாற்றி மேலே கொண்டுவந்து பார்த்தபோது மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு திலகவதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க: தூய்மை பணியாளர்கள் குரல் முதல்வருக்கு கேட்கவில்லையா..? நயினார் நாகேந்திரன் கேள்வி!

இந்த விபத்தில் முருகன் மற்றும் சிறுமி அஸ்வினி இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் சிறுவன் திருமுருகன் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.