சிதம்பரத்தில் கொட்டி தீர்த்த கனமழை… வீடு இடிந்து இரண்டு பெண்கள் மரணம்… நள்ளிரவில் நேர்ந்த சோகம்
Chidambaram Rain Tragedy : தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சிதம்பரம் அருகே வீடு இடிந்து விழுந்ததில் தாய் மற்றும் மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

சிதம்பரம், அக்டோபர் 22: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, நெற்கதிர்கள் நீரில் முழ்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஆண்டார் முள்ளிப்பள்ளம் கிராமத்தில், வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் தாய் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனமழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விபத்து
சிதம்பரம் அருகே ஆண்டார் முள்ளிப்பள்ளம் எனும் கிராமத்தில் யசோதை என்பவரும், அவரது மகள் ஜெயாவும் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் 21, 2025 யசோதையின் வீட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த யசோதையின் மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ஜெயாவை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே ஜெயா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் ஆண்டார் முள்ளிப்பள்ளம் கிராம மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயா, சில வருடங்களுக்கு முன் தனது கணவரை இழந்த நிலையில், தாயுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அவருக்கு இரண்டு ஆண், ஒரு பெண் என 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது ஜெயா உயிரிழந்த நிலையில், அவரது குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் இருக்கின்றனர். இந்த சம்பவம் அக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்லது.
இந்க சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.
அவர் மரணமடைந்த யசோதை மற்றும் ஜெயா குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி, உடனடியாக நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பாமக தலைவர் அன்புமணியின் எக்ஸ் பதிவு
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளம் கிராமத்தில் மழையால் சேதமடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அந்த வீட்டில் வசித்து வந்த யசோதை, ஜெயா ஆகிய இருவர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து வருத்தம் அடைந்தேன்.
அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு…
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) October 22, 2025
இந்த சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி, சிதம்பரம் அருகே ஆண்டார் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மழையால் சேதமடைந்த வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் அசோதை மற்றும் ஜெயா ஆகிய இருவரும் உயிரிழந்தது மிகுந்த துயரத்தை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன். அவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், அரசு வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.