பெண்களுடன் தனிமை.. நகைகளுடன் எஸ்கேப்.. இளைஞர் கைது!
Chennai Crime News: சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வேலைக்கு செல்லும் பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்து, நகைகளைத் திருடிய சஜிவுக்கு , 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரளா, டெல்லி போன்ற இடங்களிலும் குற்றங்கள் செய்த இவர், ஏற்கனவே திருமணமானவர் என தெரிய வந்துள்ளது.

சென்னை, அக்டோபர் 19: சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வேலைக்கு செல்லும் பெண்களை ஆசை வார்த்தை கூறி மயக்கி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு சென்னை கோயம்பேடு உள்ள தங்கும் விடுதி ஒன்றில் இளைஞர் ஒருவர் பெண்ணை அழைத்து வந்து அவருடன் தனிமையில் நேரம் செலவிட்டு உள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி உனக்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கித் தருகிறேன் என தெரிவித்துள்ளார். தியாகராயநகருக்கு சென்று புதிதாக நகைகள் வாங்கித் தருகிறேன் எனக்கூறி பழைய நகைகளை கழற்றித் தருமாறு அந்த இளைஞர் கூற, இதனை நம்பி அப்பெண்ணும் தான் அணிந்து இருந்த தாலி செயின், தங்க கம்மல் ஆகியவற்றை கொடுத்துள்ளார்.
ஆனால் அவற்றையெல்லாம் பெற்றுக்கொண்ட அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து ஏமாற்றமடைந்த அந்தப் பெண் கோயம்பேடு குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் குழு அமைத்து அந்த இளைஞரை தீவிரமாக தேடி வந்தனர்.
Also Read: போதைப்பொருள் கொடுத்து ஆசிரியர் பாலியல் வன்கொடுமை.. இளைஞர்கள் வெறிச்செயல்!
மேலும் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையும் நடைபெற்றது. இந்த நிலையில் அந்த இளைஞரின் செல்போன் எண்ணை வைத்து அவரது முகவரியை போலீசார் கண்டறிந்தனர். இதில் கேரளாவை சேர்ந்த சாஜிவ் தான் இந்த மோசடியை செய்தது என கண்டறியப்பட்டது.
அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது காரணம் சாஜிவ் சென்னையில் கைவரிசை காட்டியது போல திண்டுக்கலிலும் ஒரு பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து அவரிடம் நகையை பறித்து சென்றுள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக திண்டுக்கல் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அந்த புகைப்படத்தை காட்டி அந்த நபர் சாஜிவ் தான் என்பதை கோயம்பேடு போலீசார் உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி கோயம்பேடு போலீசாரால் கைது செய்யப்பட்ட சாஜிவ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் காவல் ஆய்வாளர் ரவி வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளையும் விரைவாக முடித்து ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
எழும்பூர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட சாஜிவுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூபாய் 5 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட்டது. இந்த நிலையில் சாஜிவ் ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தந்தையாக உள்ளதும் தெரியவந்துள்ளது, அவர் கூலி வேலைக்கு செல்லும் நடுத்தர வயது பெண்கள் மீது மிகுந்த நாட்டம் கொண்டுள்ளார்,
தமிழ்நாடு போன்று கேரளா, டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் சென்று இதுபோன்று மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருவதை வழக்கமாக வைத்திருப்பதும் போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இளைஞர் சாஜிவால் பெண்கள் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அதுதொடர்பாக புகார் அளிக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.