13 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்.. வரும் நாட்களில் இன்னும் உயரும் என வானிலை மையம் எச்சரிக்கை..
Tamil Nadu Weather Update: அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், வரக்கூடிய நாட்களில் குறிப்பிடத்தக்க அளவில் சற்று உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர தமிழகப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும், சில இடங்களில் மட்டும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம், ஏப்ரல் 20, 2026: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தை எடுத்துக்கொண்டால், வேலூரில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மதுரையில் 40 டிகிரி செல்சியஸ், கரூரில் 40.5 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 40.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும், கோவையில் 39.2 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 38.1 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 39.5 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 38.6 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 38.7 டிகிரி செல்சியஸ், நாமக்கல்லில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில், மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 37.9 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்த வெப்பநிலை:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வரக்கூடிய நாட்களிலும் வெப்பநிலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது ஒரு பக்கம் இருந்தாலும், வரவிருக்கும் நாட்களில் சில பகுதிகளில் மழைக்கான வாய்ப்புகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், 22 மற்றும் 23ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
அசௌகரியம் ஏற்படும் என எச்சரிக்கை:
அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், வரக்கூடிய நாட்களில் குறிப்பிடத்தக்க அளவில் சற்று உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர தமிழகப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும், சில இடங்களில் மட்டும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மீட்பு பணியின்போது மீண்டும் வெடி விபத்து – தீயணைப்பு வீரர்கள் காயம்
சென்னையில் பகல் நேரங்களில் சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஈரப்பதம் அதிகமாக இருக்கும் காரணத்தால் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே, வரக்கூடிய நாட்களில் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது; பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்த வெப்பநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.