திருநெல்வேலியில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்… கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் எச்சரிக்கை
MK Stalin : வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது திருநெல்வேலியில் வெற்றி பெறவில்லை என்றால் பதவிகள் பறிக்கப்படும் என எச்சரிக்கைவிடுத்தார். அது குறித்து பார்க்கலாம்.

மு.க.ஸ்டாலின்
சென்னை, நவம்பர் 6 : வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திமுக (DMK) தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் (MK Stalin) நவம்பர் 6, 2025 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், தொகுதி வாரியாக கட்சியின் நிலை, தேர்தல் பணிகள், வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நெல்லை நிர்வாகிகளுக்கு முதல்வர் எச்சரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 6, 2025 அன்று நெல்லை தொகுதி திமுக நிர்வாகிகளுடன் நேரடியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின்போது திமுக தென்மண்டல பொறுப்பாளர் கனிமொழி எம்.பி. உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதையும் படிக்க : கரூர் நெரிசலுக்கு காரணம் திமுகவின் அலட்சியமா? தவெகவின் முதிர்ச்சியற்ற திறனா? விரிவான பார்வை!
இந்த சந்திப்பின்போது, திருநெல்வேலியில் அனைத்து தொகுதிகளிலும் கட்சி வெற்றி பெறுவது மிக முக்கியம் என வலியுறுத்திய முதல்வர், நெல்லை தொகுதியில் திமுக தோல்வியடைந்தால், நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்படும் என்றார். மக்கள் மத்தியில் திமுக அரசின் சாதனைகளை சொல்லி, வாக்காளர்கள் வாக்களிப்பதை உறுதிப்படுத்தி வெற்றி பெறுவது அவசியம் என்று கடுமையாக எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் அவர் நேரடியாக இந்த எச்சரிக்கையை வழங்கியதாக கூறப்படுகிறது.
வாக்காளர் விவரங்கள் சேகரிப்பில் கவனம் தேவை
மேலும், வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகள் குறித்து பேசும் போது, SIR பணிகளில் ஏற்பட்ட குழப்பத்தால், பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, ஒவ்வொரு நிர்வாகியும், தங்கள் பகுதிகளில் வாக்காளர் விவரங்களை முழுமையாகச் சேகரிக்க வேண்டும். எந்த ஒரு வாக்கும் தவறாமல் பட்டியலில் இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : “தேர்தல் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம்” மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ்!!
திமுக, வரும் சட்டமன்றத் தேர்தலை வெற்றிகரமாகச் சந்திக்க பல்வேறு ஆலோசனைகள், பிரச்சாரத் திட்டங்கள், மக்கள் நல திட்டங்களின் விளக்கப் பணிகள் போன்றவற்றைத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், நெல்லை தொகுதியின் முடிவை கட்சி பெரிதும் முக்கியத்துவத்துடன் காண்கிறது என்பது இன்று நடைபெற்ற சந்திப்பின் மூலம் வெளிப்படையாகியுள்ளது. மு.க. ஸ்டாலின் வழங்கிய இந்த நேரடி எச்சரிக்கை, வரவிருக்கும் தேர்தலுக்கான திமுகவின் தீவிர அணுகுமுறையை காட்டுகிறது. நெல்லை தொகுதியில் வெற்றி பெறுவது, கட்சி நிர்வாகிகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.