தீபாவளி மது விற்பனையில் புதிய ரெக்கார்ட்.. அமைச்சர் கொடுத்த விளக்கம்!

Diwali Liquor Sales Record controversy: தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தீபாவளிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன. இந்த சம்பவம் பல்வேறு வகையில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அரசே திட்டமிட்டு இலக்கு வைத்து விற்பனையை அதிகரித்துள்ளதா, அல்லது ஊழியர்களுக்கு டார்கெட் வைத்ததா என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளது.

தீபாவளி மது விற்பனையில் புதிய ரெக்கார்ட்.. அமைச்சர் கொடுத்த விளக்கம்!

அமைச்சர் முத்துசாமி

Published: 

23 Oct 2025 18:47 PM

 IST

சென்னை, அக்டோபர் 23: தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதபோதும், மதுபானங்கள் விற்பனை அதிகரிப்பதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் எந்த பண்டிகையின்போதும், மது விற்பனை உச்சத்தை தொடுவது என்பது வாடிக்கையாகி வருகிறது. புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் என எந்த பண்டிகையாக இருந்தாலும் சரி, திருமணம், பிறந்தநாள் போன்ற விழாக்களாக இருந்தாலும் சரி, மதுபானம் இல்லாமல் கொண்டாட்டங்கள் இல்லை என்ற நிலையில் இன்றைய இளைஞர்கள் உள்ளனர். இதன் விளைவாக கடந்த 1ம் தேதி ஆயுத பூஜையன்று கூட, மது விற்பனை இதுவரை இல்லாத ஒரே நாளில் ரூ.240 கோடியை எட்டியது. அந்தவகையில், கடந்த கால சாதனைகள் அனைத்தையும் முறியடிக்கும் விதமாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனை நிகழ்ந்தது.

அதாவது, கடந்த ஆண்டு (2024) தீபாவளி பண்டிகைக்கு ரூ.490 கோடிக்கு மது விற்பனை நடந்த நிலையில், இந்த ஆண்டு அது ரூ.600 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு தீபாவளிக்கு மூன்றே நாட்களில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடந்தது. அதாவது, கடந்த 18-ந்தேதி ரூ.230.6 கோடிக்கும், 19-ந்தேதி ரூ.293.73 கோடிக்கும், தீபாவளியான 20-ந்தேதி ரூ.266.6 கோடிக்கும் என மொத்தம் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடந்தது.

Also read: கோவில் நிதியில் வணிக வளாககங்கள் கட்டக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசியல் தலைவர்கள் விமர்சனம்:

மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டு குடும்பங்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ.13,000 கோடி, அதாவது ஒரு நாளைக்கு ரூ.35.61 கோடி. இதனை 3 நாள்களுக்கு கணக்கிட்டால் ரூ.106.86 கோடி தான். ஏழை குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு அரசு வழங்கும் தொகையை விட 7.39 மடங்கு அதிக தொகையை மது வணிகம் என்ற பெயரில், அரசு ஏழைகளிடமிருந்து பறித்து கொள்வதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போன்ற அரசியல் தலைவர்கள் விமர்சித்தனர்.

அத்துடன், தமிழகத்தில் தீபாவளிக்கு வெளியான திரைப்படங்கள் குவிக்காத வசூல் சாதனையை, மூன்றே நாட்களில் டாஸ்மாக் வசூல் குவித்து சாதித்துவிட்டதாகவும், மது விற்பனை செய்வதற்கு என டாஸ்மக் ஊழியர்களுக்கு டார்க்கெட் வைக்கப்பட்டு மது விற்பனை நடப்பதாகவும், தீபாவளி சிறப்பு விற்பனை செய்ய மறைமுகமாக அரசு கூடுதல் நடவடிக்கை எடுத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Also read: மழை காலத்தில் தொடரும் மின் விபத்துகள் – தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? மின்சார வாரியம் அறிவிப்பு

அமைச்சர் முத்துசாமி விளக்கம்:

இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, தீபாவளிக்கு அதிகளவில் மதுபானங்களை விற்பனை செய்ய கூடுதல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றார். மேலும், தமிழகத்தில் ஏற்கெனவே 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், நீதிமன்ற உத்தரவுப்படி, காலிப்பாட்டில்கள் திரும்பப் பெறப்படுவதாகவும் இந்த தொகையை  தனி நபர் தவறாக பயன்படுத்த முடியாது என்பதால், இதனை தவறாக சித்தரிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.