டாஸ்மாக்கில் கூடுதல் ரூ.10 வசூலிக்கப்படுவது ஏன்? – அமைச்சர் முத்துசாமி விளக்கம்!
தமிழக டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு ₹10 கூடுதலாக வசூலிப்பது குறித்து அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார். இது காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின் ஒரு பகுதி எனவும், டெபாசிட் தொகையாக இது வசூலிக்கப்பட்டு, பாட்டில்களைத் திருப்பித் தரும்போது திருப்பித் தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் முத்துசாமி
ஈரோடு, செப்டம்பர் 20: தமிழகத்தின் டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவது குறித்து தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 43 29 டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றது. மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் டாஸ்மாக் கடைகளில் பல்வேறு வகையான மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூபாய் 10 தொடர்ச்சியாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இது மதுபிரியர்கள் இடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் பல இடங்களில் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் மது அருந்த வரும் நபர்களுக்கும் இடையே பிரச்சினையாகவும் வெடித்துள்ளது.
அமைச்சர் முத்துசாமி விளக்கம்
தமிழ்நாடு அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பெறக் கூடாது என அறிவுறுத்தியும் கூடுதல் தொகை பெறப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி இது தொடர்பாக சில விஷயங்களை தெரிவித்துள்ளார். அதன்படி ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் டாஸ்மாக்கில் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் குறித்து பேசினார்.
Also Read: டாஸ்மாக் வழக்கில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம்.. வாபஸ் பெற்ற தமிழ்நாடு அரசு!
அந்த வகையில் இந்த திட்டம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நாங்கள் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளோம். கூடுதலாக வசூலிக்கப்படும் ரூ.10 ஒரு டெபாசிட் தொகை போன்றது. மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை திரும்ப கொடுக்கும் போது இந்த தொகை திருப்பிக் கொடுக்கப்படும். படிப்படியாக இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். மேலும் மதுவை டெட்ரா பேக்குகளில் விற்கும் திட்டமும் இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு முடிவு எடுக்க வேண்டியுள்ளது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
வரவேற்பை பெறும் காலி பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம்
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கண்ணாடி பாட்டில்களில் விற்கப்படும் நிலையில் அதனை வாங்கி பருகும் நபர்கள் அப்படியே குப்பையில் போட்டு விடுகிறார்கள். அல்லது பாட்டில் உடைந்து அதன் கண்ணாடி துகள்கள் பொதுமக்கள் தொடங்கி உயிரினங்கள் வரை பல்வேறு தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை தடுக்கும் பொருட்டு காலி பாட்டில்களை திரும்ப வாங்கும் திட்டம் டாஸ்மாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
Also Read: எகிறி அடிக்கும் டாஸ்மாக் வருமானம்.. இத்தனை கோடியா? வெளியான ரிப்போர்ட்!
இது மது பிரியர்கள் இடையே மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. காரணம் கூடுதல் பணி சுமையாக இது கருதப்பட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதால் தற்போது படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் இன்று திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.