நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் இவ்வளவு நன்மைகளா? லிஸ்ட் போட்ட அமைச்சர்!
Nalam Kakkum Stalin Scheme Benefits: தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் உள்ள பல்வேறு நன்மைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்தார். அதன்படி, இந்தத் திட்டத்தில் 11.22 லட்சம் பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், அனைத்து வட்டாரங்களிலும், வட்டாரத்துக்கு 3 என்ற வகையிலும், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மாநகராட்சியில் 5 இல் தலா 4 என்ற வகையிலும், 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 19 மாநகராட்சிகளில் தலா 3 என்ற வகையிலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 என்ற வகையிலும் ஒட்டு மொத்தமாக 1,256 முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இரு நாள்கள் நடைபெறும் நலன் காக்கும் ஸ்டாலின் முகாம்
அதன்படி, தற்போது 21- ஆவது முறையாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 19 வாரங்களாக ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த முகாம் நடைபெற்றது. அண்மையில், இந்தத் திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதன் அடிப்படையில், வியாழக்கிழமையும் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 19 வாரங்களில் 32 மாவட்டங்களில் 45 இடங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க: இந்த மாநிலத்தில் 7,400 பேருக்கு ஹெச்ஐவி தொற்றா? 400 குழந்தைகளா?
17 வகையான மருத்துவ சிகிச்சை
இந்த முகாமில், சாதாரண காய்ச்சல், சளி மட்டும் சிகிச்சை அளிக்காமல் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முகாமில், பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், எலும்பியல், நரம்பியல், தோல், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது. இதில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முழு உடல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இலவசமாக மேற்கொள்ளப்படும் முழு உடல் பரிசோதனை
பொதுவாக, தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்தால் ரூ.15 முதல் 20 ஆயிரம் செலவாகும். அரசு மருத்துவமனையிலும் ரூ. 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், இந்த முகாமில் முழு உடல் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில், ஏதேனும் உடல்நல குறைபாடு இருந்தால் மேல் சிகிச்சைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அங்கீகார சான்று வழங்கப்படுகிறது.
11.22 லட்சம் பயனாளர்கள் பயன்
இதே போல, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்துக்கான அட்டைகளும் உடனடியாக பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், பயன்பெற்றோரின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தத்தில் 11 லட்சத்து 22 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: மதுபோதையில் யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை.. பெண் பரிதாப பலி.. உபியில் அதிர்ச்சி சம்பவம்!



