குறையும் மழை.. 100 டிகிரி பாரன்ஃஹீட்டை கடந்து பதிவாகும் வெப்பநிலை..
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக மழையின் தீவிரம் குறைந்து காணப்படுகிறது. மேலும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

வானிலை நிலவரம் – செப்டம்பர் 23, 2025: வளிமண்டல சுழற்சிகளின் காரணமாக செப்டம்பர் 23, 2025, இன்று வட தமிழகத்தின் சில இடங்களிலும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், செப்டம்பர் 24, 2025, நாளை மிதமான மழையும், 2025, செப்டம்பர் 26 மற்றும் செப்டம்பர் 27 ஆகிய இரண்டு நாட்களில் கோவை மற்றும் நீலகிரியில் கனமழை பதிவாகக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குறையும் தென்மேற்கு பருவமழை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக மழையின் தீவிரம் குறைந்து காணப்படுகிறது. இதற்கிடையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை முதல் இரவு நேரங்களில் வெப்ப சலனம் காரணமாக நல்ல மழை பதிவாகி வருகிறது.
மேலும் படிக்க: சென்னையில் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – டிரைவர் உட்பட 8 பேர் காயம்
இதன் விளைவாக பகல் நேரங்களில் வெப்பநிலை தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருந்த நிலையில், தற்போது அது 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் மிதமான மழை பதிவாகும் என்றும், சில மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: காலியாக உள்ள 2,417 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
100 டிகிரி பாரன்ஃஹீட்டை கடந்து பதிவாகும் வெப்பநிலை:
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 38.5°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் – 37.6°C, திருச்சியில் – 35.9°C, பாளையங்கோட்டையில் – 38.1°C, கரூரில் – 35.0°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 33.2°C, மீனம்பாக்கத்தில் 32.0°C பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் அதிகபட்சமாக இயல்பை விட 3.7°C அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது.