மகாபலிபுரம்-கொடைக்கானலில் ரோப் கார் சேவை…மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை!
Mahabalipuram Kodaikanal Ropeway Service: மகாபலிபுரம் மற்றும் கொடைக்கானலில் ரோப் கார் சேவை திட்டத்தை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்காக வாப்ஸ்கோ நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.

மகாபலிபுரம்-கொடைக்கானல் ரோப் கார் சேவை
தமிழகத்தில் சுற்றுலா தளங்களை மேம்படுத்தும் பணிகளில் தமிழக அரசும், தமிழக சுற்றுலா துறையும் பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாபலிபுரத்தில் தமிழக அரசு சார்பில் உலகளாவிய சுற்றுலா மாநாடு நடைபெற்றது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில் ரோப் கார் சேவை தொடங்குவதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில், கொடைக்கானல் மற்றும் மகாபலிபுரத்தில் ரோப் கார் சேவை இயக்கப்படுவதற்கான சாத்திய கூறுகள் குறித்து அறிக்கை தயாரிக்கும் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
ரூ.1.50 கோடி செலவில் ரோப் கார் சேவை
இந்த பணிகளை மேற்கொள்வதற்காக புதுடெல்லியை சேர்ந்த வாப்கோஸ் நிறுவனம் ஆலோசராக நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மகாபலிபுரத்தில் ரோப் கார் சேவை திட்டத்துக்காக ரூ.71.93 லட்சமும், கொடைக்கானலில் ரோப் கார் சேவை திட்டத்துக்காக ரூ.78.28 லட்சமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த இரு இடங்களிலும் ரோப் கார் திட்டத்தை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வேதா சுமன் மற்றும் வாப்ஸ்கோ நிறுவனத்தின் திட்ட மேலாளர் ராமன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
மேலும் படிக்க: பிப்ரவரி 13 வரை தமிழகத்தின் 14 மாவட்டங்களின் கடும் பனி மூட்டம் நிலவும்.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
ரோப்கார் சேவைக்கான சாத்திய கூறு ஆய்வு
இந்த ஒப்பந்தமானது சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவன தலைவர் எம். ஏ. சித்திக் முன்னிலையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, வாப்ஸ்கோ நிறுவனமானது, மகாபலிபுரம் மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் ரோப் கார் சேவை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் மற்றும் அதனை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும். பின்னர், இது தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.
கூடுதல் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக…
இதை தொடர்ந்து, மேற்கண்ட இரு இடங்களில் ரோப் கார் சேவை தொடங்குவதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது. மகாபலிபுரம் மற்றும் கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் மகாபலிபுரம் மற்றும் கொடைக்கானலில் தரைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்க்கின்றனர். கொடைக்கானலில் மட்டும் மலைப்பகுதிகளில் வாகனங்கள் செல்லும் என்பதால் ஒரு சில இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிகிறது.
மகாபலிபுரம்-கொடைகானல் அழகை காண…
தற்போது, ரோப் கார் சேவை திட்டம் தொடங்கப்பட்டால், மகாபலிபுரத்தின் சிற்பங்கள் மற்றும் கடலின் அழகையும் கொடைக்கானலில் பள்ளத்தாக்கு, மலைப்பகுதி ஆகியவற்றையும் வானில் பறந்த படியும் சுற்றி பார்க்க முடியும். இது சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு அலாதியான இன்பத்தை வழங்கும் என்பதில் ஐயமில்லை.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் தர்காவில் பக்ரீத்-ரமலான் பண்டிகையில் மட்டுமே தொழுகை நடத்த அனுமதி…உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு!