AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை நீடிக்குமா? சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

Tamil Nadu By Poll: தமிழகத்தில் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது. இதனால் இடைத்தேர்தல் அறிவிப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை நீடிக்குமா? சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Nov 2026 09:17 AM IST

நவம்பர் 27, 2026: தமிழகத்தில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடத் தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்தத் தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் காலியாக இருக்கும் சட்டமன்ற தொகுதிகள்:

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போதைய முதலமைச்சர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒருவர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதற்கிடையில், அதிமுகவைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் தமிழகத்தில் மொத்தம் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் காலியாகின.

மேலும் படிக்க: வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! தென் மாவட்டங்களுக்கு கனமழை இருக்குமா?

இதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு ஏற்கனவே இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்தத் தேர்தலில் திமுக இரண்டாவது இடத்தையும், அதிமுக மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

இதனைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய ஐந்து தொகுதிகள் காலியாக உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கு பொங்கல் பண்டிகைக்குப் பிறகு இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் தற்போது மொத்தம் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன.

இடைத்தேர்தலுக்கு தடை கோரி பொதுநல வழக்கு!

திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு எதிராகத் தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடத் தேர்தல் ஆணையத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட இடைக்காலத் தடை விதித்து ஜூலை 10ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

மேலும் படிக்க: ரேஷன் கடை காலி பணியிடங்கள்.. சுய உதவிக்குழு தேர்வுக்கு எதிர்ப்பு.. இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க கோரிக்கை!

தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் விஜய் மனு!

இதற்கிடையே, ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் தனித்தனியாக மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மற்றும் பிரதான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து கடந்த அக்டோபர் 1ஆம் தேதி உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வெளியாக உள்ளது. இடைக்காலத் தடை தொடருமா அல்லது தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Follow Us