டாஸ்மாக் பார் டெண்டரில் இனி இது தான் ரூல்ஸ்.. ஆயத்தீர்வைத் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TASMAC Bar Tenders New Regulations : தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை டெண்டர் வழங்குவதில் புதிய விதிமுறை களை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அறிவித்துள்ளது . அது என்னென்ன விதிமுறைகள் என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம் .
தமிழகத்தில் 4,048 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுடன் சேர்ந்து பார்களும் செயல்பட்டு வருகிறது. இவற்றுக்கான அனுமதி காலம் முடிவடைந்த நிலையில் மீண்டும் தனியாருக்கு டெண்டர் வழங்குவதில் புதிய விடுமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்து பார்களை நடத்துவதற்கான அங்கீகாரம் தனியார்களுக்கு ஒப்பந்தப்புள்ளி மூலமாக வழங்கலாம். இதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, அதில், அதிக தொகையை வழங்கும் தகுதியான தனிநபர் அல்லது தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு டாஸ்மாக் பார் நடத்துவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது.
100 மீட்டர் தொலைவுக்குள் டாஸ்மாக் பார் அமைக்க வேண்டும்
அங்கீகாரம் அளிக்கப்பட்ட பாரானது சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான கடைக்கு அருகில் இருக்க வேண்டும். அதாவது, அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள சில குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு டாஸ்மாக் கடையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவுக்குள் பார் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன், பார் அமைக்கப்படும் இடத்துக்கு குறைந்தபட்சம் 20 சதுர மீட்டர் ( 215 சதுர அடி) பரப்பளவு இருத்தல் வேண்டும். அங்கு, மது அருந்த வருபவர்களின் வசதிக்காக குடிநீர் மற்றும் கைகளை கழுவுவதற்கான தண்ணீர் வசதி ஏற்படுத்துதல் வேண்டும்.
மேலும் படிக்க: கொலையில் முடிந்த குடும்ப தகராறு.. காதல் மனைவியை வெட்டி வீசிய கொடூர கணவன்.. ரத்தம் சொட்ட சொட்ட போலீசில் சரண்!
வழிபாட்டு தலங்கள்- கல்வி நிறுவனங்கள் அருகே பார் இருத்தல் கூடாது
மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவிலும், பிற பகுதிகளில் சுமார் 100 மீட்டர் தொலைவிலும் பார்கள் அமைக்கப்பட வேண்டும். அத்துடன், பார் அமைக்கப்படும் இடத்துக்கு மாவட்ட அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விதிகள் பின்பற்றப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பார் அமைவிடம் விதிகளுக்கு ஏற்றதாக இருப்பதை உறுதி செய்த பின்னரே அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக பார்களில் 21 வயதுக்கு குறைவான சிறுவர்கள் மது அருந்த அனுமதி அளிக்கக்கூடாது.
12 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பார்கள் செயல்பட வேண்டும்
மேலும், நன்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பார்கள் செயல்பட வேண்டும். அரசு அறிவித்துள்ள மதுபான விற்பனை இல்லாத நாட்களிலும் பார்கள் செயல்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு டாஸ்மாக் பார் டெண்டரில் குறிப்பிட்ட விதிமுறைகள் இருந்த நிலையில், தற்போது கூடுதலான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.