புதிய உச்சம்! தீபாவளியை முன்னிட்டு ரூ.789 கோடி மது விற்பனை – எந்த மாவட்டத்தில் அதிகம் தெரியுமா?

Record Diwali Liquor Sales : தமிழ்நாட்டில் இந்த 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.700 கோடிக்கும் அதிகமாக டாஸ்மாக் மதுபான விற்பனை நடைபெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மது விற்பனை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

புதிய உச்சம்! தீபாவளியை முன்னிட்டு ரூ.789 கோடி மது விற்பனை - எந்த மாவட்டத்தில் அதிகம் தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Published: 

21 Oct 2025 15:54 PM

 IST

சென்னை, அக்டோபர் 21 : தீபாவளி (Diwali) பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் வழியாக மொத்தம் ரூ.789 கோடி 85 லட்சம் மது (Liquor) விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில் மது விற்பனை அதிகரிப்பது வழக்கமாக இருந்தாலும், இந்த ஆண்டு தீபாவளி விற்பனை கணிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் அதிக அளவு விற்பனையாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் பொதுவாக பண்டிகை காலங்களில் மது விற்பனை அதிகம் இருக்கும். இந்த நிலையில் அக்டோபர் 20, 2025 தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் நிர்வாகம், மதுபானங்களை அதிக அளவு ஸ்டாக் வைத்திருக்க வேண்டும் என கடைகளுக்கு உத்தரவிட்டிருந்தது. தீபாவளியை முன்னிட்டு ரூ.600 கோடிக்கு மது விற்பனையாகும் என கணிக்கப்பட்டது. ஆனால் கணிப்பைத் தாண்டி ரூ.789 கோடியே 85 லட்சத்துக்கு மது விற்பனாயாகியிருக்கிறது.

புதிய உச்சத்தை தொட்ட மது விற்பனை

தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகளும், 3,240 பார்களும் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மது அதிக விற்பனையாகும் என்பதை கணித்த டாஸ்மாக் நிர்வாகம், போதிய மதுபானங்களை இருப்பு வைத்துக்கொள்ள கடைகளுக்கு அறுவுறுத்தியிருந்தது. மேலும் சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் அதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்த நிலையில் தீபாவளிக்கு ரூ.600 கோடிக்கு மது விற்பனையாகும் என கணித்த நிலையில், ரூ.789 கோடி அளவுக்கு மது விற்பனையாகியிருக்கிறது. இது புதிய உச்சமாக கருதப்படுகிறது.

இதையும் படிக்க : புகையால் சூழ்ந்த சென்னை.. காற்று மாசு 500-ஐ தாண்டியதால் அதிர்ச்சி..

பொதுவாக தமிழ்நாட்டில் ஒரு நாளில் ரூ.120 முதல் ரூ.130 கோடி வரை  மது விற்பனை நடைபெறும் எனவும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என விடுமுறை நாட்களில்  இது ரூ.150 கோடி வரை மது விற்பனை உயரும். மேலும் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் 15 சதவிகிதம்  வரை கூடுதலாக விற்பனை செய்யப்படும். கடந்த 2024 ஆம் ஆண்டு  தீபாவளி தினத்தன்று ரூ.438 கோடி மதுவிற்பனை நடந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.600 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்பை தாண்டி ரூ.700 கோடிக்கும் அதிகமாக மது விற்பனையாகியிருக்கிறது.

எந்த மண்டலத்தில் அதிக மது விற்பனை?

மண்டல வாரியாக அதிக மதுபானம் விற்கப்பட்டது என்ற விவரமும் வெளியாகியுள்ளது. அதன் படி அதிகபட்சமாக தென்மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டலத்தில் ரூ.170.64 கோடி விற்பனையாகியிருக்கிறது.  அதற்கு அடுத்த இடத்தில் சென்னை மண்டலம் உள்ளது. இங்கே மூன்று நாட்களில் ரூ.158.25 கோடிக்கு மது விற்பனை நடந்திருக்கிறது. திருச்சி மண்டலத்தில் ரூ.157.34 கோடி மது விற்பனையாகியிருக்கிறது. சேலம் மண்டலத்தில் ரூ.153.34 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது. கோவை மண்டலத்தில் ரூ.150.31 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது.

இதையும் படிக்க : தமிழ்நாட்டில் 13 இடங்களில் பட்டாசினால் தீ விபத்து – தீயணைப்புத்துறை சொன்ன பகீர் தகவல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 90 டாஸ்ஸ்மாக் கடைகள் மூலம் வழக்கத்தை விட இரண்டு மடங்கு விற்பனை நடந்துள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டும் ரூ.5.06 கோடி மதுவிற்பனை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.