பரந்தூர் விமான நிலையம்.. தொடங்கியது பத்திரப்பதிவு.. 4 மணி நேரத்தில் பணம்!
Parandur Airport : பரந்தூர் விமான நிலையத்திற்கான பத்திரப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக 19 நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே, நிலம் கொடுத்தவர்களுக்கு பத்திரப்பதிவு முடிந்தவுடன், 4 மணி நேரம் அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பரந்தூர், ஜூலை 09 : காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலைய திட்டத்திற்கான (Parandur Airport) பத்திரப்பதிவு தொடங்கி உள்ளது. நிலம் கொடுத்தவர்களுக்கு பத்திரப்பதிவு முடிந்த 4 மணி நேரத்திற்குள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்புகள் தொடரும் நிலையில், பத்திரப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் இருந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, விமான நிலையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து, சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசு அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. பரந்தூர் விமான நிலையம் அமைக்க சுமார் ரூ.29,150 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், பரந்தூர் விமான நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
Also Read : வந்தே பாரத் ரயிலில் திடீரென கிளம்பிய புகை.. அலறிய பயணிகள்.. என்னாச்சு?
பரந்தூர் ஏர்போர்ட் திட்டத்திற்கு பத்திரப்பதிவு தொடக்கம்
இத்திட்டத்தால் பரந்தூர், வளத்தூர், சிறுவள்ளூர், குணகரப்பாக்கம், அக்கமாபுரம், மகாதேவி மங்கலம், ஏகனாபுரம், பொடவூர், நெல்வாய், தண்டலம், தோடூர் உள்ளிட்ட பல கிராமங்கள் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. இருப்பினும், விமான நிலையத்தை அமைக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் வருகின்றனர். இதற்காக இழப்பீட்டு தொகையை தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. அதன்படி, ஒரு ஏக்கருக்கு ரூ.ரூ.35 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக பத்திரப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் கூட்டு துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு தொடக்கப்பட்டுள்ளது. ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 19 நில உரிமையாளர்கள் இந்த திட்டத்திற்காக தங்கள் நிலத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர். ரூ.9.22 கோடி ரூபாய் மதிப்பில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சுமார் 17.52 ஏக்கர் நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
Also Read : கடலூர் பள்ளி வேன் -ரயில் விபத்து: கேட் கீப்பர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
பத்திரப்பதிவு முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு 4 மணி நேரத்திற்கு வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. பரந்தூர் விமான நிலையத்திற்காக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பத்திரப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.