பள்ளி பேருந்து மீது ரயில் மோதி விபத்து.. பதைபதைக்க வைக்கும் பின்னணி!
Cuddalore School Bus Accident | கடலூரில் பள்ளி பேருந்தின் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், அந்த பகுதி கேட் கீப்பர் என்ன நடக்கிறது என கவனிக்காமல் தூங்கியது தான் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், தெற்கு ரயில்வே அது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

கடலூர், ஜூலை 08 : கடலூரில் (Cuddalore) பள்ளி பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில், 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி பேருந்து ரயில்வே கேட்டை தாண்ட முயற்சி செய்த போது, ரயில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் காடமடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பள்ளி பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பள்ளி பேருந்து மீது ரயில் மோதி கோர விபத்து
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்துள்ளது. அப்போது, அந்த வழியாக வந்த ரயில் மோதி கடும் விபத்துக்கு உள்ளானது. இந்த நிலையில், பள்ளி பேருந்து சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி பேருந்து முழுவதுமாக நொறுங்கிய நிலையில், பேருந்தில் பயணம் செய்த இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பள்ளி பேருந்தில் மொத்தம் 4 மாணவர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் என 6 பேர் பயணம் செய்த நிலையில், அவர்களில் 6 ஆம் வகுப்பு படித்து வந்த நிமிலேஷ் என்ற மாணவரும், சாருமதி என்ற மாணவியும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் பேருந்தில் இருந்தவர்கள், விபத்து நடந்த பகுதிக்கு அருகில் இருந்தவர்கள் என 6 பேர் பலத்த காயமடைந்த நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




விபத்து நடைபெற்றது எப்படி – ரயில்வே விளக்கம்
பள்ளி பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதற்கு கேட் கீப்பர் தான் காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், விபத்து குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்தது. இது குறித்து கூறியுள்ள தெற்கு ரயில்வே, ரயில்வே கேட்டை திறக்க வேண்டும் என பள்ளி பேருந்து ஓட்டுநர் கேட் கீப்பரிடம் வலியுறுத்தியுள்ளார். கேட் கீப்பர் கேட்டை மூட தொடங்கிய போது, பள்ளி பேருந்து ஓட்டுநர் கேட்டை திறக்க கூறியுள்ளார்.
மேலும் தான் கடந்து செல்லும் வரை ரயில்வே கேட்டை மூட வேண்டாம் என அவர் கூறியதாகவும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது. இதன் மூலம் பேருந்து ஓட்டுநரின் வேண்டுதலின் அடிப்படையிலேயே கேட் கீப்பர் கேட்டை திறந்து வைத்திருந்தது உறுதியாகியுள்ளது. இதுவே பள்ளி பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாக முதன்மை காரணமாக இருந்துள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும் செம்மங்குப்பம் கேட் கீப்பரை தெற்கு ரயில்வே பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.