10,000 பேர் வருவார்கள் என கணித்தது தவறு… விஜய் டாப் ஸ்டார் – நீதிபதி சரமாரி கேள்வி
Karur Stampede Case : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கரூர் மாவட்ட நிர்வாகிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் பேசிய நீதிபதி விஜய்யின் கூட்டத்திற்கு 10,000 பேர் வருவார்கள் என எப்படி கணித்தீர்கள் விஜய் டாப் ஸ்டார் என்று பேசினார்.

விஜய்
கரூரில் கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் (Vijay) பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கில் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அவர்கள் இருவரும் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு செப்டம்பர் 30, 2025 அன்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில் அரசு தரப்பு மற்றும் தவெக தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன் வைத்தனர். இந்த வழக்கு குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
அரசு தரப்பு வாதம்
இந்த வழக்கில் அரசு தரப்பில் நீதிமன்றத்தில், கூட்ட நெரிசல் ஏற்பட்ட கரூரில் போலீஸ் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியது. 41 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று தனது வாதத்தை வழக்கறிஞர்கள் முன் வைத்தனர்.
இதையும் படிக்க : கரூர் சம்பவம்.. முன்ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் நீதிமன்றத்தில் மனு!
அப்போது பேசிய தவெக தரப்பு வழக்கறிஞர், ஒரு நபர் ஆணைய அறிக்கை வரும் வரையில் யாரையும் கைது செய்யக் கூடாது, விஜய் பரப்புரைக்கு வந்தது தானாக வந்த கூட்டம், வண்டி வைத்து அழைத்து வரவில்லை. விஜய் கூட்டத்திற்கு 10,000 பேர் வருவார்கள் என காவல்துறையினரிடம் தெரிவித்தோம். சம்பள நாள் என்பதால் யாரும் வரமாட்டார்கள் என்று கணித்தோம் உழவர் சந்தை பகுதியில் பொறியாளர்களை கொண்டு ஆய்வு செய்தோம், 23 ஆம் தேதி லைட் அவுஸ் கார்னர் பகுதியில் அனுமதி தருவதாக போலீஸ் கூறியது என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் அனுமதி தராதது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த டிஎஸ்பி செல்வராஜ், ரயில்வே பாலம் உள்ளதால் கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் விஜய்யின் பரப்புரைக்கு அனுமதி தரவில்லை என பதிலளித்தார்.
விஜய்யை பார்க்க குழந்தைகள் வருவார்கள்
அப்போது தவெக வழக்கறிஞரிடம், மைதானம் போன்ற பகுதியை ஏன் கேட்கவில்லை? கூட்டம் குறைவாக வரும் என ஏன் கணக்கிட்டீர்கள். விஜய்யை பார்க்க குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள். அதற்கு தகுந்த இடத்தை கேட்டிருக்க வேண்டும். நீங்கள் கேட்ட 3 இடமே கூட்டத்திற்கு போதுமானது அல்ல. எடப்பாடி பழனிசாமிக்கு வருவது கட்சிக் கூட்டம். விஜய்யை பார்க்க அனைத்து தரப்பினரும் வருவார்கள். காலாண்டு, வார விடுமுறை உள்ள நிலையில் ஏன் மக்கள் குறைவாக வருவார்கள் என கணக்கிட்டீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் பேசிய நீதிபதி, அதிக கூட்டம் வரும் என விஜய்க்கு சொல்லப்பட்டதா? அவரவர் உயிரைக் காப்பாற்ற அவரவர் ஓடுகிறார்கள். தவறு யார் மீது சொல்ல முடியும் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த டிஎஸ்பி, பரப்புரை வாகனம் குறிப்பிட்ட இடத்தை வந்தவுடன் போதும் என்றேன். ஆனால் ஆதவ் அர்ஜூனா தான் இன்னும் முன்னேறி செல்வோம் என்றார்.
3 மணிக்கே வந்திருந்தால் அசம்பாவிதம் நடந்திருக்காது
முனுசாமி கோவில் பகுதியில் ஆனந்த வாகனத்தை நிறுத்தி தாமதம் செய்தார். அங்கே கேரவன் உள்ளே விஜய் சென்று விட்டார். அங்கேயே விஜய்யை பார்த்திருந்தால் கூட்டம் கலைந்து சென்றிருக்கும். விஜய்யின் பரப்புரை வாகனம் முன்னே சென்றபோது தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என விளக்கமளித்தார். மேலும் பேசிய அவர், சொன்ன நேரத்திற்கு வராதது தான் அசம்பாவிதத்திற்கு காரணம். மதியம் 3 மணிக்கே வந்திருந்தால் அசம்பாவிதம் எதுவும் நடந்திருக்காது என்றார்.
இதையும் படிக்க : கலவரத்தை தூண்டும் விதமாக ஆதவ் அர்ஜுனா பதிவு.. சில நிமிடங்களில் டெலிட்.. கொதித்தெழுந்த திமுக!
கூட்டத்திற்கு வந்தது தவெகவினர் இல்லை
பின்னர் பேசிய தவெக வழக்கறிஞர், அசாதாரண சூழல் இருந்தால் பரப்புரையை நிறுத்தலாம் என்று நிபந்தனை உள்ளது; அதை காவலர்கள் ஏன் செய்யவில்லை, அதிக கூட்டம் வரும் என்பது தெரிந்தும் காவலர்கள் கட்டுப்படுத்தவில்லை, பரப்புரை இடத்தில் சாக்கடைக் குழி, வெறும் அட்டை வைத்தே அடைத்து வைக்கப்பட்டிருந்தது. கரூரில் விஜயின் கூட்டத்திற்கு வந்தது தவெகவினர் இல்லை; சாதாரண மக்கள் தான். கூட்ட நெரிசலுக்கு பின்னால் அரசியல் சூழ்ச்சி உள்ளது என்றார்.
பின்னர் பேசிய நீதிபதி, விஜய் பரப்புரையைக் காண 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என கணித்ததே தவறு. முதலமைச்சர் மற்றும் மற்றக் கட்சித் தலைவர்களுடன் விஜயை ஒப்பிடக்கூடாது. டாப் ஸ்டாரான விஜயை காண 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என எப்படி கணித்தீர்கள்? எந்த ஆவணத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது, மனசாட்சிப்படி உத்தரவு பிறப்பிப்பேன் என்று பேசினார்.