கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைந்து சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி.. எப்போது தெரியுமா?
Sunset and Moonrise Simultaneously in Kanyakumari | சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை காண சிறந்த இடமாக கன்னியாகுமரி உள்ளது. கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய அஸ்தமனம் மற்றும் உதயத்தை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடும் நிலையில், மிகவும் அரிய நிகழ்வான ஒரே நேரத்தில் சூரியன் உதயமாகும் மற்றும் சந்திரன் தோன்றும் நிகழ்வு நடைபெற உள்ளது.

கோப்பு புகைப்படம்
கன்னியாகுமரி, மே 08 : கன்னியாகுமரியில் (Kanyakumari) மே 12,2025 அன்று மாலை சூரியன் மறையும் (Sunset) காட்சியையும், அதே நேரத்தில் சந்திரன் உதயம் (Moon Rising) ஆகும் காட்சியையும் ஒரே நேரத்தில் காண முடியும் என வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த அரிய மற்றும் அற்புதமான காட்சியை கன்னியாகுமரியிலும், ஆப்ரிக்காவிலும் மட்டுமே காண முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒரே நேரத்தில் நிகழ உள்ளது இந்த அதிசய நிகழ்வு குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கன்னியாகுமரி
இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனமும் கன்னியாகுமாரியில் தெரியும் என்பதால் அதனை காணவே ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில், இந்த அதிசய நிகழ்வு நடைபெற உள்ளதாலும், தற்போது கோடை விடுமுறை காலம் என்பதாலும் கன்னியாகுமரி கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் தோன்ற உள்ள சூரிய அஸ்தமனம் மற்றும் சந்திர உதயம்
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தின் மேற்கு பகுதியில் உள்ள அரபிக் கடல் பகுதியில் சூரியன் மறைவதும், அதே நேரத்திரல் சந்திரன் உதயமாகும் அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளது. பொதுவாக சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சந்திரன் உதயமாவது தனித்தனி நிகழ்வுகளாக இருக்கும். அதுமட்டுமன்றி, அவற்றுக்கு கால இடைவெளியும் இருக்கும். ஆனால், மே 12, 2025 அன்று வழக்கத்திற்கு மாறாக மிகவும் அதிசயிக்க கூடிய வகையில், இரண்டு நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. இந்த அதிசய நிகழ்வை வெறும் கண்களாலும் காண முடியும்.
கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
கன்னியாகுமரி கடற்கரையில் தெரிய உள்ள இந்த அதிசய நிகழ்வு உலக அளவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. காரணம் ஆப்ரிக்காவிலும், கன்னியாகுமரியிலும் மட்டும் தான் இந்த நிகழ்வை காண முடியும். இந்த நிலையில் கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதால் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.