வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 7 நாட்களுக்கு நீடிக்கும் மழை..
Tamil Nadu Weather Alert: அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் செப்டம்பர் 7, 2025 தேதி வரை, மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம் – செப்டம்பர் 1, 2025: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைப் பொருத்தவரையில், மேகவெடிப்பின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பதிவாகியுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து பெரியபட்டி (மதுரை), பெரம்பூர் (சென்னை), மண்டலம் 09 – ஐஸ் ஹவுஸ் (சென்னை), மரக்காணம் (விழுப்புரம்) தலா 4 செ.மீ., திருமயம் (புதுக்கோட்டை), மண்டலம் 18 – அமைந்தக்கரை (சென்னை), மண்டலம் 05 – சென்னை சென்ட்ரல் (சென்னை), மண்டலம் 11 – நெற் குன்றம் (சென்னை), ஆவடி (திருவள்ளூர்), சென்னை (N) AWS (சென்னை), தானியமங்கலம் (மதுரை), வானூர் (விழுப்புரம்), புதுச்சேரி டவுன் (புதுச்சேரி), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), செய்யூர் (செங்கல்பட்டு), சந்தியூர் (சேலம்), மேட்டுப்பட்டி (மதுரை), மேலூர் (மதுரை) தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி:
இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, செப்டம்பர் 1, 2025 தேதியான இன்று தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: உடனே Password-ஐ மாத்துங்க.. 2.5 பில்லியன் ஜிமெயில் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கூகுள்.. காரணம் என்ன?
அதேபோல், இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2 மற்றும் செப்டம்பர் 3 தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த நிலை செப்டம்பர் 7, 2025 வரை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மிதமான மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தாலும், வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சீனியாரிட்டியில் 9வது ஆள் டிஜிபி ஆனது ஏன்? அடுக்கடுக்கான கேள்வி கேட்ட அண்ணாமலை!
சென்னையில் மழைக்கு வாய்ப்பா?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அளவு மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.