யாரையும் சந்திக்கவில்லை.. டெல்லி பயணம் குறித்து செங்கோட்டையன் விளக்கம்!
Sengottaiyan on Delhi Visit | கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்ட நிலையில், டெல்லி செல்லும் செங்கோட்டையன் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கோயம்புத்தூர், செப்டம்பர் 08 : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் (AIADMK – All India Anna Dravida Munnetra Kazhagam) அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் டெல்லி சென்று பாரதிய ஜனதா கட்சி (BJP – Bharatiya Janata Party) மூத்த தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இன்று (செப்டம்பர் 08, 2025) செய்தியாளர்களை சந்தித்த அவர், யாரையும் சந்திக்கவில்லை என்றும் மன அமைதிக்காக ஹரிதுவார் செல்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட செங்கோட்டையன்
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு வைத்திருந்தார். இந்த நிலையில், அவர் அது குறித்து பேசிய அடுத்த நாளே, அவரை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அதிமுக அறிவித்தது. எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கை கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், செங்கோட்டையனின் பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில், அதனை கண்டித்து அவரது ஆதரவாலர்கள் சுமார் 1,000 பேர் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்தனர்.
இதையும் படிங்க : தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலக நயினார் நாகேனந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் பகீர் குற்றச்சாட்டு..




ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஆதரவு
செங்கோட்டையனுக்கு ஆதரவாக தொண்டர்கள் மட்டுமன்றி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட அதிமுகவின் அங்கம் வகித்த பலர் ஆதரவு தெரிவித்தனர். இது அரசில் கலத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான், செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் 08, 2025) டெல்லிக்கு சென்று பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக செங்கோட்டையனின் டெல்லி பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இதையும் படிங்க : நெருங்கும் தேர்தல்.. பாஜகவின் மாநில மாநாடுகள்.. பிரதமர் மோடி பங்கெற்க திட்டம்..
இந்த நிலையில், தகவலின்படியே செங்கோட்டையன் டெல்லி செல்வதற்காக இன்று (செப்டம்பர் 08, 2025) காலை கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் யாரையும் சந்திக்கவில்லை என்றும் மன அமைதிக்காக ஹரிதுவார் செல்கிறேன் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.