Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Madurai: குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு? – மதுரை அருகே அதிர்ச்சி சம்பவம்!

மதுரை மாவட்டம், அமச்சியாபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இக்கிராமத்தில், பாதுகாப்பான குடிநீர் கிடைக்காததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Madurai: குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு? – மதுரை அருகே அதிர்ச்சி சம்பவம்!
மக்கள் புகாரளித்த குடிநீர் தொட்டி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 09 Oct 2025 08:58 AM IST

மதுரை, அக்டோபர் 9: மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலந்திருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி அருகேயுள்ள கருப்படி ஊராட்சிக்குட்பட்ட அமச்சியாபுரம் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது. மக்கள் இந்த கிராமத்தில் வசிக்கும் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நீண்ட காலமாக சரியான தண்ணீர் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் புதிதாக நிறுவப்பட்ட குடிநீர் மேல்நிலை தொட்டி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தான் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் கடந்த 2 நாட்களாக குடிநீர் தொட்டியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் தொட்டியில் மனித கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமச்சியாபுரம் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இதனிடையே சமூக ஊடகங்களில் இதுதொடர்பான வீடியோ வெளியாகி கடும் சர்ச்சைகளை கிளப்பியது.

இதையும் படிங்க: திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்.. 3 பேர் கைது..

இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஏ. வெங்கடேசன் கூறுகையில், புதிதாக கட்டப்பட்ட நிலத்தடி நீர்த்தேக்க தொட்டியானது மூன்று நாட்களுக்கு முன்புதான் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த புதிய நீர்த்தேக்கத்திலிருந்து மூன்று நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. மக்களின் புகாரைத் தொடர்ந்து உடனடியாக ஆய்வு செய்யுமாறு தொகுதி மேம்பாட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டேன்” என்று கூறினார். மேலும் தொட்டியில் பூசப்பட்ட புதிய வண்ணப்பூச்சு காரணமாகவும் தண்ணீர் நிறம் மாறியிருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அமச்சியாபுரம் மக்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சிறுவனிடம் விசாரணை நடந்த போலீசார் முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது. அந்த சிறுவனை மேல்நிலை குடிநீர் தொட்டியின் மேலே பார்த்ததாக மக்கள் கூறியிருப்பதாகவும்,இந்த சம்பவத்தில் எந்த வகுப்புவாத அல்லது சாதி அடிப்படையிலான நோக்கமும் இருப்பதாக சந்தேகிக்கப்படவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: முதியோர் இல்லத்தில் பகீர் சம்பவம்.. கொடுமைப்படுத்தப்பட வயதானவர்கள்!

இரண்டு நாட்களாக அமச்சியாபுரம் கிராமத்தில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில் எங்கள் குழந்தைகள் எதையும் குடிக்க பயப்படுகிறார்கள் என கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அந்த கிராமத்தினரின் புகார்களைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகமும் சுகாதார அதிகாரிகளும் கிராமத்திற்கு விரைந்தனர்.

தொட்டியில் உள்ள தண்ணீரை காலி செய்து முழுமையாக சுத்தம் செய்ய உத்தரவிட்டனர். மேலும் தொற்று பரவாமல் இருக்க அனைத்து கிராம மக்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. வேங்கை வயல் சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் அவ்வப்போது இதுபோன்ற குடிநீர் தொட்டியில் மலம் கலப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.