மாம்பழம் சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
PMK Symbol Dispute : மாம்பழம் சின்னம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பிப்ரவரி 2, 2026 அன்று விசாரணைக்கு வந்த நிலையில் தேர்தல் ஆணையம் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அன்புமணி ராமதாஸ் - ராமதாஸ்
சென்னை, பிப்ரவரி 2 : பாமகவின் (PMK) மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் (Ramadoss) சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, பிப்ரவரி 2, 2026 அன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
பாமக கட்சிக்குள் தலைவர் பதவி தொடர்பாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு இடையே உட்கட்சி மோதல் நீடித்து வருகிறது. இந்த சூழலில், தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸ் அணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவரது அங்கீகாரம் பெற்ற முகவருக்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்த ராமதாஸ், அந்த கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், சின்னம் தொடர்பான அறிவிப்பை தன் அங்கீகாரம் பெற்ற முகவருக்கு வழங்க வேண்டும் என்றும் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
இதையும் படிக்க : அதிமுக தனிக்கட்சி அல்ல…அது பாஜகவின் கிளை…முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!
ராமதாஸ் தரப்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்
ராமதாஸ் தாக்கல் செய்த மனுவில், அன்புமணி ராமதாஸ் கட்சித் தலைவர் பதவிக்காலம் கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைந்துவிட்டதாகவும், அதன் பிறகும் அவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து தலைவர் என்ற பதவியில் நீடிப்பதாகவும், கட்சி நிறுவனர் அனுமதி இல்லாமல் கட்சி கூட்டங்களை கூட்டி சட்டவிரோதமாக செயல்பட்டதாகவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், டெல்லி உயர் நீதிமன்றத்தில், மாம்பழம் சின்னம் எந்த அணிக்கும் வழங்கப்படாது, அது ஃப்ரீஸ் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் உறுதி அளித்ததாகவும், ஆனால் அந்த உறுதி இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் இதுகுறித்து 3 வாரங்களுக்குள் தங்களது விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதனிடையே, அன்புமணி ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவரை இந்த வழக்கில் தங்களையும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் அந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
பாமக கட்சிக்குள் நிலவும் இந்த விவகாரம், தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பதிலுக்கு பிறகு, இந்த வழக்கில் யாருக்கு சாதமாக தீர்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் உருவாகியுள்ளது.