கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை, டிசம்பர் 03: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து தமிழகம்– புதுச்சேரி கடற்கரைகளில் இருந்து 25 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து, சென்னைக்கு கிழக்கு – தென் கிழக்கே சுமார் 40 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு வடகிழக்கே 120 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டிருந்தது. இது தென்மேற்கு திசையில் வடதமிழகம் – புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுகுறையக் கூடும். மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து கன மழைபெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.
கணிப்புகளை மீறிய மழைப்பொழிவு:
தித்வா புயல் எதிரொலியாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்த நிலையில், புயல் வலுவிழந்து எதிர்பார்த்த மழையை தராமல் இருந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக திங்கட்கிழமை (டிச.1) மிக கனமழை பெய்தது. ஆனால், அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். அதோடு, மாணவர்கள் மழையில் பள்ளிக்கு சென்ற பின்னர் எழுந்த கடும் எதிர்ப்பால் அன்று சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை:
இந்நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து மழை பெய்து வருவதன் காரணமாக இன்று (டிச.3) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.




அதேசமயம், திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீப திருநாள் காரணமாக இன்று (டிச.3) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அந்த மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ஆகும்.
இன்று மிக கனமழை எச்சரிக்கை:
இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.