‘பணத்தால் சிதைந்த நட்பு’.. நண்பனை கொடூரமாக கொன்ற நபர்.. திடுக் சம்பவம்!!
கிருஷ்ணகிரியில் பணப் பிரச்சினை காரணமாக நீண்ட நாள் நட்பு பகையாகி, நண்பர் முன்னாள் ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கூலி படையுடன் இணைந்து குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வலைவீசி தேடிவருகின்றனர்.
கிருஷ்ணகிரி, ஜனவரி 09: கிருஷ்ணகிரி அருகே ரியல் எஸ்டேட் அதிபரை அவருடைய நண்பர் கூலிப்படையுடன் வந்து சரமாரியாக குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெருங்கி உறவுகளுடன் கொடுக்கல், வாங்கல் கூடாது என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்த இந்தச் சம்பவம், பணம் பழக்க வழக்கத்தை பார்க்காது என்பதையும் எடுத்துகாட்டியுள்ளது. பணம் வந்தால் நண்பர்கள் நெருங்கவும் செய்யலாம், பணம் பிரச்சினையாக மாறினால் அதே நண்பர்கள் பகைவர்களாக மாறவும் நேரிடுகிறது. கிருஷ்ணகிரியில் நடந்த கொடூரக் கொலையும், பணத்திற்கு நண்பர் இல்லை, பணம் களைய வந்தால் உறவு கூட உயிரை வீழ்த்திடும் என்ற துயர உண்மையை மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது. இச்சம்பவம் குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : சபரிமலை தங்கம் மாயமான வழக்கு…தமிழக தொழிலதிபருக்கு தொடர்பு இல்லை…நீதிமன்றத்தில் எஸ்ஐடி குழு!
நண்பர்களான ரியல் எஸ்டேட் அதிபர்கள்:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா குந்துமாரனப்பள்ளியை சேர்ந்தவர் குருபிரசாத் (31). இவர் பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவரும் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த பாபு என்பவரும் நண்பர்கள் ஆவார்கள். இவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இருவருக்கும் பணம் கொடுக்கல் – வாங்கல் தொடர்பாக அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
கூலி படையுடன் நடந்த கொலை:
இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு 11 மணி அளவில் குருபிரசாத்தும், அவரது தாயார் முனிரத்தம்மாளும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் அவரது வீட்டிற்கு பாபு உட்பட 4 பேர் வந்தனர். அவர்கள் கதவை தட்டி குருபிரசாத்தை எழுப்பினர். பிறகு நைசாக குருபிரசாத்தை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்தனர்.
பின்னர் வீட்டு வாசலில் திடீரென அவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக வயிறு, மார்பு உட்பட பல பகுதிகளில் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த குருபிரசாத் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவரை கொலை செய்ததும் பாபு தரப்பினர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதையும் படிங்க : எலி மருந்து… துரிதமாக செயல்பட்டு வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்றிய டெலிவரி ஊழியர் – வைரலாகும் வீடியோ
பாபு உட்பட 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு:
இதனிடையே குருபிரசாத்தின் அலறல் சத்தம் கேட்டு அங்கு அவரது தாயார் ஓடி வந்தார். அவர் ரத்த வெள்ளத்தில் குருபிரசாத் கொலை செய்யப்பட்டது கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த கொலை தொடர்பாக கெலமங்கலம் போலீசார் பாபு மற்றும் கூலிப்படையை சேர்ந்த 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.