குடியரசு தினம் 2026 : சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு – 7,500 போலீசார் குவிப்பு
Republic Day 2026 : இந்த 2026 ஆம் ஆண்டு குடியரசு தினம் நாடு முழுவதும் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் 7,500 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

மாதிரி புகைப்படம்
சென்னை, ஜனவரி 25 : குடியரசு தின விழாவை (Republic Day 2026) முன்னிட்டு சென்னை மாநகரில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 77வது குடியரசு தினம் நாளை ஜனவரி 26, 2026 அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் சென்னை மெரினா (Marina) கடற்கரையில் உள்ள தொழிலாளர் சிலை அருகே நடைபெறும் அரசு விழாவிற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றுகிறார். இதனை முன்னிட்டு காமராஜர் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு
இந்த விழாவிற்காக சென்னை மாநகர காவல்துறை சார்பில் மொத்தம் 7,500 போலீஸ் பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூடுதல் காவல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோரின் நேரடி கண்காணிப்பில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின்படி இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள்…குடியரசு தின விழாவில் அறிவிப்பு? எவை அவை!
மேலும், சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன், சென்னை முழுவதும் உள்ள லாட்ஜ்கள் மற்றும் ஹோட்டல்களில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காவல் நிலைய எல்லைகளில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை நகருக்குள் நுழையும் முக்கிய நுழைவு வாயில்களான மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம் மற்றும் நீலாங்கரை ஆகிய பகுதிகளில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, தீவிர வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல், மீனம்பாக்கம் விமான நிலையம், சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து முனையங்கள் உள்ளிட்ட முக்கிய மற்றும் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க : புதிய கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்? தேர்தல் ஆணையத்திலும் பதிவு…கட்சியின் பெயர் என்ன தெரியுமா!
டிரோன் பறக்க தடை
மேலும், குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25, 2026 இன்று மற்றும் ஜனவரி 26, 2026 நாளை, மெரினா கடற்கரையில் உள்ள தொழிலாளர் சிலை பகுதி, ராஜ்பவனிலிருந்து மெரினா வரையிலான சாலை, தமிழக முதல்வரின் இல்லத்திலிருந்து மெரினா செல்லும் வழித்தடங்கள் ஆகியவை அரசு நிகழ்ச்சிகளைத் தவிர ‘ரெட் ஸோன்’ பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் டிரோன் உள்ளிட்ட ஆளில்லா விமானங்கள் பறக்க விட கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன் பறக்க விடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். குடியரசு தின விழா அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை மாநகர காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.