புகாரை திரும்ப பெறக் கோரி மிரட்டல்…பெண் இன்ஸ்பெக்டர் கைது…மற்றொருவருக்கு வலைவீச்சு!
Female Police Inspector Arrested: விருதுநகர் மாவட்டத்தில் புகார் அளித்த பெண்ணிடம் புகாரை திரும்ப பெறுமாறு மிரட்டல் விடுத்த பெண் காவல் ஆய்வாளரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இதில், தொடர்புடைய நபரை தேடி வருகின்றனர்.

விருதுநகரில் பெண் காவல் ஆய்வாளர் கைது
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாலதி. இவரிடம் கடந்த 2023- ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா நகரை சேர்ந்த ராம்குமார் என்பவர் சொந்த காரணங்களுக்காக 33 பவுன் நகையை பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, மாலதி தளவாய்புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அண்மையில் சிறையில் இருந்து விடுதலை ஆன ராம்குமார், மாலதியிடம் தன் மீது அளிக்கப்பட்ட புகாரை வாபஸ் பெறுமாறு கூறி மிரட்டல் விடுத்து வந்தாராம். இதனிடையே, ராம்குமாருக்கு தெரிந்தவரான சத்தியசீலா என்பவர், மாலதியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
புகாரை திரும்ப பெறக் கோரி மிரட்டல்
அப்போது, நானும் ராம்குமாரிடம் ஏமாற்றப்பட்டதாகவும், என்னுடன் சேர்ந்து நீங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், அவரிடம் இழந்த நகை மற்றும் பணத்தை மீட்டு தருவதாக சத்தியசீலா கூறியுள்ளார். இதனை மாலதியும் உண்மை என நம்பி அவர் கூறிய இடத்துக்கு தனியாக சென்றுள்ளார். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்த மாலதியை சத்திய சீலா மற்றும் ராம்குமார் ஆகியோர் இணைந்து புகாரை திரும்ப பெற கோரி மிரட்டி உள்ளதாக தெரிகிறது. இதன் பின்னர் இது தொடர்பாக தளவாய்புரம் காவல் நிலையத்தில் மாலதி புகார் அளித்தார்.
மேலும் படிக்க: கன்னியாகுமரியில் விபத்தில் சிக்கி பலியான தம்பதி….தமிழகத்துக்கு சுற்றுலா வந்தபோது நேர்ந்த சோகம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் கொலையில் தொடர்பு
அதன் பேரில், ராம்குமார் மற்றும் சத்தியசீலா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், சத்யசீலாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அகதிகள் முகாமில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்ததும், அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ந்த கொலை சம்பவத்தில் ராம்குமார் உடன் சேர்ந்து கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது.
பெண் காவல் ஆய்வாளர் கைது
மேலும், இந்த சம்பவத்தில் காவல் ஆய்வாளர் சத்திய சீலா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், புகாரை திரும்ப பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் சத்திய சீலா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இதில் தொடர்புடைய ராம்குமார் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: வேலூர் சிஎம்சி மருத்துவமனை மருத்துவர்கள் குடியிருப்பில் அமலாக்கத் துறை சோதனை…முக்கிய ஆவணங்கள் கைப்பற்றல்!