விஜய் முதலில் தேர்வு எழுதி பாஸ் ஆகட்டும்.. அப்போது சொல்கிறேன் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்..
R.B. Udhayakumar: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி பேசிய ஆர்.பி உதயகுமார், “ விஜய் பரீட்சை எழுதாமலேயே பாஸ் ஆகிவிடுவேன் என நினைக்கிறார். முதலில் அவர் பரீட்சை எழுதட்டும்; எத்தனை மதிப்பெண்கள் எடுக்கிறார் என்பதைப் பார்த்துவிட்டு அதைப்பற்றி விவாதிக்கலாம்” என பேசியுள்ளார்.

செப்டம்பர் 21, 2025: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இப்போதுதான் படித்து வருகிறார்; முதலில் அவர் பரீட்சை எழுதட்டும், அப்போதுதான் அதில் எத்தனை மதிப்பெண்கள் கிடைக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்று முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தரப்பில் அதன் தலைவர்கள் அனைவரும் மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வெற்றிக்கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், செப்டம்பர் 13, 2025 முதல் மாவட்டம் தோறும் சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
விஜய் பிரச்சாரம்:
செப்டம்பர் 13, 2025 அன்று திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 20, 2025 அன்று நாகை மற்றும் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நான்கு மாவட்டங்களிலும், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திமுக அரசை கடுமையாக சாடி, பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகிறார். அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கும் நேரடியாக கேள்விகளை எழுப்பி வருகிறார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் தொடரும் மழை.. சென்னையில் எப்படி இருக்கும்? வானிலை சொல்வது என்ன?
தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டி என்பது தமிழக வெற்றிக்கழகத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையேயே இருக்கும் என விஜய் மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறி வருகிறார். இதற்கு கருத்து தெரிவிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பதிலளித்துள்ளார்.
விஜய் முதலில் தேர்வு எழுதட்டும் – ஆர்.பி உதயகுமார்:
அப்போது பேசிய அவர், “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்; மக்களை சந்திக்கலாம்; மக்களிடம் ஆதரவை கேட்கலாம். திமுகவிற்கும் தமிழக வெற்றிக்கழகத்திற்கும் போட்டி என விஜய் அறியாமலோ தெரியாமலோ பேசுகிறார். விஜய் பரீட்சை எழுதாமலேயே பாஸ் ஆகிவிடுவேன் என நினைக்கிறார். முதலில் அவர் பரீட்சை எழுதட்டும்; எத்தனை மதிப்பெண்கள் எடுக்கிறார் என்பதைப் பார்த்துவிட்டு அதைப்பற்றி விவாதிக்கலாம்” எனக் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: 1967, 1977, 2026.. கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் – விஜய்..
திமுகவை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தி அதிமுக தான்:
மேலும், “விஜய் இப்போதுதான் படித்து வருகிறார். பரீட்சை எழுதி மதிப்பெண் பெற்றால் தான் என்ன என்பது தெரியும். ஆசிரியர்கள் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் சொல்வார்கள். ஆனால் எல்லோரும் பாஸ் ஆவார்களா என்றால் இல்லை; இது எல்லாம் மதிப்பெண் அடிப்படையில்தான் நடக்கும். அதே சமயம், திமுகவை வீழ்த்தக்கூடிய மிகப்பெரிய சக்தியும் ஆற்றலும் வலிமையும் தொண்டர்களும் மக்கள் செல்வாக்கும் கொண்டது அதிமுக மட்டுமே. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, திமுகவை நிச்சயமாக வெல்லும்” எனத் தெரிவித்தார்.