தமிழக சட்டமன்றத் தேர்தல் எப்போது? – மார்ச் மாதத்தில் வெளியாகும் அறிவிப்பு
Tamil Nadu Poll Date : தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார திட்டங்களை உருவாக்கி வருகின்றனர்.

மாதிரி புகைப்படம்
தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது, தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிடப்படும். இந்த ஆண்டு தமிழகத்துடன் சேர்த்து கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி மாற்றமின்றி தொடர்கிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் காங்கிரஸ் – திமுக இடையிலான சலசலப்புகள் எழுந்தாலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த கனிமொழி கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிக்க : தவெக தேர்தல் பிரசார சட்ட பாதுகாப்பு குழு…34 பேர் கொண்ட டீமை இறக்கிய விஜய்!
அதேபோல், அதிமுக தலைமையிலான கூட்டணியும் வலுப்பெற்று வருகிறது. இந்த அணியில் ஏற்கனவே பாஜக, அன்புமணி தலைமையிலான பாமக, அமமுக, புரட்சி பாரதம், தமுமுக உள்ளிட்ட கட்சிகளும் இணைந்துள்ளது. சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் பங்கேற்று தங்களது பலத்தை காண்பித்தனர்.
விஜயின் தவெக எதிர்கொள்ளும் முதல் தேர்தல்
இதற்கு நடுவே, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இந்த சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கத் தயாராகி வருகிறது. அக்கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் உள்ள ஆதரவு காரணமாக, 2026 சட்டமன்றத் தேர்தல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடும் சவாலாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையமும் தனது தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறது. வாக்காளர் பட்டியலின் சிறப்பு திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக கள ஆய்வுப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்க உள்ளது.
இதையும் படிக்க : பாமகவுக்கு வெற்றிக் கூட்டணியை கண்டறிவதில் சிக்கல்…கெளரவத் தலைவர் ஜி.கே.மணி!
இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் தேதிகளை மார்ச் மாதத்தில் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதன்படி, தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பும் மார்ச் மாதத்தில் வெளியாகும் என்பது உறுதியாக தெரிவித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.