வேலூர், பிப்ரவரி 17, 2026: மகா சிவராத்திரி விழாவையொட்டி வேலூர் பாலாற்றங்கரையில் மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மாசி அமாவாசையை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வேலூர் ஓல்டு டவுன், மக்கான், விருதம்பட்டு, கழிஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மின்விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டத் தேரில் அம்மனை ஊர்வலமாக கொண்டு வந்து தரிசனம் செய்தனர்.
மகா சிவராத்திரி தேரோட்டம்:
பக்தர்கள் ரூபாய் மாலை, பூமாலை, எலுமிச்சை மாலை அணிவித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். காளி, அம்மன், சிவன், ஹனுமன், முருகன், கருப்பசாமி உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் ஆண்கள், பெண்கள் மேளதாளங்கள் முழங்க நடனமாடி விழாவை சிறப்பித்தனர். பாலாற்றில் உள்ள மயானத்தில் 7 அம்மன் ரதங்கள் இறக்கப்பட்டு, பக்தர்கள் பூ, பழம், சுண்டல், உப்பு, மிளகு, சில்லறை காசுகள் உள்ளிட்டவற்றை வீசி வழிபாடு செய்தனர். சிலர் முன்னோர்களின் கல்லறைகளில் படையலிட்டும் வழிபட்டனர்.
விழாவையொட்டி காவல் கண்காணிப்பாளர் சிவராமன் தலைமையில் 1200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திடீரென சாய்ந்து விபத்துக்குள்ளான தேர்:
#Vellore pic.twitter.com/wlAxtb4k5v
— Karthick Chandrasekar (@kart997) February 17, 2026
இதனிடையே, விருதம்பட்டு பகுதியில் இருந்து டிராக்டரில் 60 அடி உயர மின்விளக்குத் தேர்கள் மூன்று பாலாற்றுக்கு கொண்டு வரப்பட்டன. விழாவுக்கு பின்னர் கோவிலுக்கு திரும்பும் போது, டிராக்டரை பாலாற்றங்கரைக்கு எடுத்துவரும் போது, எதிர்பாராத விதமாக சுமார் 60 அடி உயரம் கொண்ட தேர் திடீரென சாய்ந்து விழுந்தது. அப்போது, தேரின் அடியில் கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்த 5 பேர் சிக்கிக்கொண்டனர்.
மேலும் படிக்க: பிப்.27ல் வெளியாகும் தவெக வாக்குறுதிகள்.. இலவசங்கள் இடம்பெறுமா?.. எகிறும் எதிர்பார்ப்புகள்..
உடனடியாக அங்கிருந்தவர்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் உதவியுடன் அந்த 5 பேரையும் மீட்டு, வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தேர் கவிழ்ந்த போது காவலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்திசையில் இருந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தொடர்ந்து, தேரில் சிக்கியிருந்த சாமி சிலையை பக்தர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மயான கொள்ளை விழா:
ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி மறுநாள் மாசி அமாவாசை அன்று நடைபெறும் மயான கொள்ளை தொடர்பாக, சிவன் பிரம்மனின் அகந்தையைப் போக்க பிரம்மனின் தலையை கொய்ததாகவும், அதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தால் அவரது கையில் கபாலம் திருவோடாக மாறி, சிவன் பல நாட்கள் மயானத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் ஈஸ்வரி அம்மன் சிவனின் நிலையைப் போக்க மேல்மலையனூரில் பரமேஸ்வரியாக அமர்ந்தாள். அப்போது சிவன் பிச்சை கேட்க, அம்மன் சாப்பாட்டு உருண்டையை கீழே போட்டார். சிவன் கையிலிருந்த கபாலம் அதை உண்ண கீழே வந்தபோது, அம்மன் அதை அழித்ததே மயான கொள்ளை என பக்தர்கள் நம்புகின்றனர்.