சொத்து பத்திரத்தில் டிஜிட்டல் கையெழுத்து.. மோசடிகளை தடுக்க வருகிறது புதிய மாற்றம்!!
Digital Signature: அரசு மற்றும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் டிஜிட்டல் கையெழுத்து சேவைகளை வழங்கி வருகின்றன. ஆதார் உள்ளிட்ட அடையாள சான்றுகளை சமர்ப்பித்து, கட்டணம் செலுத்துவதன் மூலம் தனிநபர் டிஜிட்டல் கையெழுத்துக்கான ரகசிய குறியீட்டை பெற முடியும். இந்த குறியீட்டை பயன்படுத்தி எந்த ஆவணத்திலும் பாதுகாப்பான முறையில் கையெழுத்திடலாம்.

பத்திரப்பதிவு
சொத்து விற்பனை மற்றும் வாங்கல் தொடர்பான பத்திரங்களில், விற்பவரும் வாங்குபவரும் டிஜிட்டல் முறையில் கையெழுத்திடும் வசதியை கொண்டு வருவது குறித்து பதிவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். வீடு, மனை உள்ளிட்ட நிலையான சொத்துகள் பரிவர்த்தனையில் நடைபெறும் மோசடிகளை கட்டுப்படுத்த, பதிவுத்துறை ஏற்கனவே பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இருந்தபோதிலும், ஆள்மாறாட்டம் செய்து அல்லது போலி ஆவணங்களை பயன்படுத்தி உண்மையான உரிமையாளருக்குத் தெரியாமல் சொத்துகளை அபகரிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சார்-பதிவாளர்கள் கடுமையான சோதனைகளை மேற்கொண்டாலும், சில நேரங்களில் மோசடி பத்திரங்கள் பதிவு செய்யப்படும் நிலை தவிர்க்க முடியாததாக உள்ளது.
மேலும் படிக்க: 2026 சட்டமன்ற தேர்தல்…தவெக-பாஜகவுக்கு…வைகோ மறைமுக எச்சரிக்கை!
பத்திரப் பதிவில் டிஜிட்டல் கையெழுத்து:
இவ்வகை மோசடிகளில், சொத்து விற்பவர் மற்றும் வாங்குபவர்களின் கையெழுத்துகளை வெளியாட்கள் போலியாக இடுவது முக்கிய சிக்கலாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக, சொத்து பத்திரங்களில் டிஜிட்டல் கையெழுத்து முறையை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. தற்போது அரசு துறைகளில் கோப்புகள், உத்தரவுகள் மற்றும் அதிகாரப்பூர்வ கடிதங்களில் உயரதிகாரிகள் டிஜிட்டல் கையெழுத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதே நடைமுறையை சொத்து பத்திரப் பதிவிலும் அமல்படுத்தினால், பாதுகாப்பு அதிகரிக்கும் என பதிவுத்துறை கருதுகிறது.
கூடுதல் பாதுகாப்பு வழங்கும்:
இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சொத்து பத்திரப் பதிவை எளிதாக்கும் நோக்கில் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். பொதுமக்கள் எங்கிருந்தாலும் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் வசதிக்காக ‘ஸ்டார் 3.0’ என்ற புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தற்போது சார்-பதிவாளர்கள் உள்ளிட்ட பல நிலை அலுவலர்கள் டிஜிட்டல் கையெழுத்தை பயன்படுத்தி வருவதாகவும், அடுத்த கட்டமாக பொதுமக்களுக்கும் இந்த வசதியை வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆன்லைன் பத்திரப்பதிவில் இது கூடுதல் பாதுகாப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காகித ஆவணங்களின் பயன்பாடு குறைந்து, டிஜிட்டல் ஆவணங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆரம்பத்தில் கணினியில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களிலும் கைமுறை கையெழுத்தே பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, கணினியில் தயாரிக்கப்படும் ஆவணங்களில் நேரடியாக டிஜிட்டல் கையெழுத்தை பதிவு செய்ய முடியும்.
ரூ.1,500க்கு டிஜிட்டல் கையெழுத்து சேவை:
அரசு மற்றும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் டிஜிட்டல் கையெழுத்து சேவைகளை வழங்கி வருகின்றன. ஆதார் உள்ளிட்ட அடையாள சான்றுகளை சமர்ப்பித்து, கட்டணம் செலுத்துவதன் மூலம் தனிநபர் டிஜிட்டல் கையெழுத்துக்கான ரகசிய குறியீட்டை பெற முடியும். இந்த குறியீட்டை பயன்படுத்தி எந்த ஆவணத்திலும் பாதுகாப்பான முறையில் கையெழுத்திடலாம்.
மேலும் படிக்க: தமிழக காவல் துறையில் நீடிக்கும் ஆர்டர்லி முறை.. உடனடியாக திரும்பப்பெற தமிழக பொறுப்பு டிஜிபி அபய்குமார் சிங் உத்தரவு..
தற்போது சுமார் 1,500 ரூபாய் கட்டணத்தில் இந்த வசதி கிடைக்கிறது. தேவையான ஆவணங்கள் உள்ள யாரும் இதை பெற முடியும். ஒருவரின் டிஜிட்டல் கையெழுத்தை வேறு நபர் போலியாக பயன்படுத்த முடியாத அளவுக்கு பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.