”தமிழகத்தின் fake id அதிமுக.. அதன் அட்மின் அமித்ஷா” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்..

Udhayanidhi Stalin Criticism: இன்றைக்கு தமிழ்நாட்டு அரசியலில் திராவிடம் என்ற பெயரில் இருக்கும் பேக் ஐடியே அ.தி.மு.க. அந்த பேக் ஐடியின் உண்மையான அட்மின் அமித்ஷாதான். அப்படிப்பட்ட முழு ‘சங்கியாக’ எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் என விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”தமிழகத்தின் fake id அதிமுக.. அதன் அட்மின் அமித்ஷா” - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்..

கோப்பு புகைப்படம்

Published: 

07 Dec 2025 13:14 PM

 IST

விழுப்புரம், டிசம்பர் 7, 2025: “அடிமை ஆட்சி வந்து விடக் கூடாது. நம்முடைய உரிமைகளை மீட்க வேண்டுமென்றால் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும்” என விக்கிரவாண்டி கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க. கிளை செயலாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் விக்கிரவாண்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக துணை முதலமைச்சரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது:

அப்போது பேசிய அவர், “ நம் தலைவர் ஆட்சிக்கு வந்து 4½ ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளார். கழக அரசின் பல்வேறு முற்போக்கு திட்டங்களால்தான் இன்றைக்கு இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக — நம்பர் ஒன் மாநிலமாக — நம் தமிழ்நாடு விளங்குகிறது.

மேலும் படிக்க: மதுரையில் பல ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.. முழு விவரம்..

இதுவரை தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 11.19% வளர்ச்சியுடன், அதாவது இரட்டை இலக்க வளர்ச்சியை நம் மாநிலம் அடைந்திருக்கிறது. இதையெல்லாம் பொறுக்க முடியாத பா.ஜனதா அரசும் அதன் அடிமைகளும் தமிழ்நாடு அரசுக்கு தொந்தரவு கொடுக்க பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர்.

எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்குகளை பறிக்கும் முயற்சி:

இன்றைக்கு பா.ஜனதா அரசு, எஸ்.ஐ.ஆர். கொண்டு வந்து தேர்தல் ஆணையம் மூலமாக நம் வாக்குரிமையை பறிக்க முயற்சிக்கிறது. பா.ஜனதாவுக்கு எதிராக வாக்களிக்கக்கூடிய இஸ்லாமியர்கள், மகளிர், ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குரிமையை எப்படியாவது தடுத்து பறித்துவிட வேண்டும் என்பதுதான் இந்த எஸ்.ஐ.ஆர். திட்டத்தின் நோக்கம். நாம் எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்க்கிறோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை ஆதரிக்கிறார்.

தமிழநாட்டின் பேக ஐடி அதிமுக தான்:

இன்றைக்கு பேஸ்புக்கில் ‘பேக் ஐடி’ என்று நிறைய பேர் இருப்பார்கள். பெயர் மட்டும் இருக்கும்; ஆள் இருக்க மாட்டார். அதுபோல் இன்றைக்கு தமிழ்நாட்டு அரசியலில் திராவிடம் என்ற பெயரில் இருக்கும் பேக் ஐடியே அ.தி.மு.க. அந்த பேக் ஐடியின் உண்மையான அட்மின் அமித்ஷாதான்.

மேலும் படிக்க: தந்தையின் உயிரை பறித்த யானை தெய்வானை.. பாகனின் மகள்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!!

அப்படிப்பட்ட முழு ‘சங்கியாக’ எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார். இனிமேல் அவர் டெல்லிக்கு போகும்போது கர்ச்சீப்பால் முகத்தை மூட வேண்டிய அவசியமில்லை; வெளிப்படையாகவே அமித்ஷாவை சென்று பார்க்கலாம்; அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்கலாம்.

விவசாய நிலத்தை குத்தகைக்கு விடுவது போல — நிலம் ஒருவருடையது; விவசாயம் இன்னொருவர் செய்வது போல — இப்போது அ.தி.மு.க. அமித்ஷாவால் குத்தகைக்கு எடுக்கப்பட்டு, அவருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது. அதனால்தான் எடப்பாடி பழனிசாமியின் பேச்சும் அறிக்கையும் பார்த்தால், அது அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து வந்ததா அல்லது பா.ஜனதா அலுவலகத்தில் இருந்து வந்ததா என்று தெரியாதபடி உள்ளது.

தடைகளை தாண்டி சாதனை படைத்த திமுக அரசு:

இந்த சூழ்ச்சிகளை எல்லாம் தாண்டி நம் தலைவர் தமிழ்நாடு அரசை வழிநடத்தி வருகின்றார். இந்த 4½ ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பயன் பெற்ற குறைந்தது ஒருவராவது இருக்கிறார். அவர்களிடம் நம் அரசின் சாதனைகளை தொடர்ந்து ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

அடுத்த 4 மாதங்கள் மிகவும் முக்கியமானவை. “இந்த தெருவுக்கு நான் பொறுப்பு; இந்த பத்து வீடுகளுக்கு நான் பொறுப்பு” என்று நீங்கள் உங்களுக்குள் பிரசார பொறுப்பை பிரித்துக்கொள்ளுங்கள். மக்களை தினமும் சந்தித்து தெருமுனைப் பிரசாரம், திண்ணை பிரசாரம் செய்து கொண்டு இருங்கள்.

தமிழ்நாட்டில் அடிமை ஆட்சி வரக்கூடாது:

இன்னொரு முறை பா.ஜனதா கட்டுப்பாட்டில் இருக்கும் அடிமை ஆட்சி மீண்டும் வரக் கூடாது.
முன்பு அவர்கள் தமிழ்நாட்டை ‘வாடகைக்கு’ விட்டிருந்தார்கள்; மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டையே பா.ஜனதாவுக்கு விற்றுவிடுவார்கள். நம் உரிமைகளை மீட்க வேண்டுமென்றால் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். அதற்காக நீங்கள் அனைவரும் இப்போதே களத்தில் இறங்கி பிரசாரப் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை