மதுரையில் பல ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.. முழு விவரம்..
CM MK Stalin Madurai Visit: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளத்துறை சார்பாக, அம்ருத் திட்டத்தின் கீழ் முல்லைப்பெரியார் லோயர் கேம்பெல் இருந்து மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்குவதற்கான திட்டம் கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வந்தது. இதை முதலமைச்சர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மதுரை, டிசம்பர் 7, 2025: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நவம்பர் 6, 2025 அன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு சென்றடைந்தார். அதனைத் தொடர்ந்து, மதுரை முத்தம் கோடியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில், மதுரை மாவட்டத்தில் உள்ள 1,01,211 நபர்களுக்கு ரூ.174 கோடி மதிப்பிலான வீட்டுமனைப் பட்டா வழங்கினார். மேலும், ரூ.365 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்:
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளத்துறை சார்பாக, அம்ருத் திட்டத்தின் கீழ் முல்லைப்பெரியார் லோயர் கேம்பெல் இருந்து மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்குவதற்கான திட்டம் கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வந்தது. இதை முதலமைச்சர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
ரூ.2070.69 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் 2,57,750 வீடுகளுக்கு தினமும் 125 MLD குடிநீர் வழங்கப்பட்டு, 20 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகில் வைக்கப்பட்டிருந்த மாதிரி குடிநீர் தொட்டியில் இருந்து நீர் விநியோகத்தையும் அவர் துவக்கி வைத்தார்.
மேலும் படிக்க: ‘டிச.16ல் ஈரோட்டில் விஜய் சுற்றுப்பயணம்’.. அனுமதி கேட்டு சென்ற செங்கோட்டையன்!!
கூட்டு குடிநீர் மேம்பாட்டு திட்டம்:
அதேபோல், ரூ.240 கோடி மதிப்பில் டீ.கல்லுப்பட்டி மற்றும் சேடப்பட்டி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 236 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் மேம்பாட்டு திட்டம் மற்றும் ரூ.127 கோடி மதிப்பிலான மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 88 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீர் மேம்பாட்டு திட்டங்களையும் துவக்கினார்.
மேலும், ரூ.17.17 கோடி மதிப்பிலான 7 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்; ரூ.2630.88 கோடி மதிப்பிலான 63 முடிவுற்ற பணிகளையும் தொடர்ந்து பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மேலும் படிக்க: “தேர்தல் நெருங்கும் நேரத்தில் லேப்டாப் வழங்குவதா?” நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!!
மதுரையில் நடக்கும் தொழில் முதலீட்டாளர்கள மாநாடு:
இவற்றை முடித்தபின், காலை 10 மணியளவில் விரகனூர் ரிங் ரோட்டில் உள்ள வேலம்மாள் ஐடா செட்டியார் அரங்கில் நடைபெற்ற “தமிழ்நாடு வளர்கிறது” என்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டில் பல தொழில் நிறுவனங்களுக்கும் தமிழக அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.