தீவிரமடையும் மோன்தா புயல் – சென்னைக்கு வரவிருந்த 4 விமானங்கள் ரத்து.. ரயில் சேவையும் பாதிப்பு
Cyclone Montha : மோன்தா புயல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரவிருந்த 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மழையின் காரணமாக ஆந்திராவின் கடல் பகுதியை ஓட்டி வரும் ரயில் சேவைகள் தாமதமாகும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மாதிரி புகைப்படம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் (Cyclone Montha) தீவிரமடைந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மோன்தா புயல் அக்டோபர் 28, 2025 மாலை அல்லது இரவில் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கடற்கரை கடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதனையடுத்து தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரா மாநிலங்களில் கனமழை இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக ஆரஞ்சு அலெர்ட் (Orange Alert) கொடுக்கப்பட்டிருப்பதால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
விமானம் மற்றும் ரயில் சேவைகள் பாதிப்பு
மோன்தா புயல் தீவிரமடைந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திராவில் 3 நகரங்களில் இருந்து அக்டோபர் 28, 2025 அன்று சென்னைக்கு வர இருந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தப்பட்டது. விசாகப்பட்டிணத்தில் இருந்து சென்னை விரவிருந்த இண்டிகோ விமானம், ராஜமுந்திரியில் இருந்து வரவிருந்த இண்டிகோ விமானம், விஜயவாடாவில் இருந்து வரவிருந்த இண்டிகோ விமானம், விசாகப்பட்டிணத்தில் இருந்து வரவிருந்த இண்டிகோ விமானம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆந்திர கடலோர பகுதிகள் வழியாக செல்லும் பல ரயில்களும் தமதமாக புறப்படும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : Cyclone Montha: மோன்தா புயல் எப்போது, எங்கு கரையை கடக்கும்..? வானிலை ஆய்வு மையம் தகவல்..!
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், மோன்தா புயல் தற்போது வங்கக்கடலில் மையம்கொண்டுள்ள நிலையில், 15 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாகவும, அக்டோபர் 28, 2025 அன்று காலை வரை தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் தெரிவித்துள்ளது. இது காக்கிநாடா அருகே மச்சிலிபட்டணம் மற்றும் கலிங்கப்பட்டணம் இடையே கடற்கரை கடக்கும் எனவும் அப்போது மணிக்கு 90–100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், திடீரென 110 கி.மீ. வரை வீசும் வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : நாளை கரையை கடக்கும் மோன்தா புயல்.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..
தமிழ்நாட்டில் மிதமான மழை
மோந்தா புயல் வடக்கே நகர்வதால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை குறைந்து வருகிறது. இருப்பினும், சென்னை வானிலை ஆய்வு மையம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையின் சில பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யவில்லை. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், கடலோர பகுதிகளில் கடல் அலையோட்டம் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.