நாளை கரையை கடக்கும் மோன்தா புயல்.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..
Montha Cyclone: மோன்தா புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (28-ஆம் தேதி) காலை தீவிரப்புயலாக வலுப்பெற்று, மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிரப்புயலாக 28-ஆம் தேதி மாலை – இரவு நேரத்தில் கரையை கடக்கக்கூடும்.
வானிலை நிலவரம், அக்டோபர் 27, 2025: நேற்று (26-10-2025) காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவு “மோன்தா” புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (27-10-2025) காலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 520 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 570 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகபட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 600 கிலோ மீட்டர் தொலைவிலும், போர்ட் ப்ளேயரிலிருந்து (அந்தமான் தீவுகள்) மேற்கே 850 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
நாளை கரையை கடக்கும் மோன்தா புயல்:
இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (28-ஆம் தேதி) காலை தீவிரப்புயலாக வலுப்பெற்று, மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிரப்புயலாக 28-ஆம் தேதி மாலை – இரவு நேரத்தில் கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: 37 குடும்பங்களுக்கு ஆறுதல் கூறும் விஜய்!
எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை:
27 அக்டோபர் 2025 தேதியான இன்று வட தமிழகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 28, 2025 தேதியான நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ராகுல் காந்தியை மட்டுமே ‘சகோதரர்’ என்று அழைப்பேன்: முதல்வர் ஸ்டாலின்
அக்டோபர் 29, 2025 முதல் நவம்பர் 2, 2025 வரை தமிழகத்தில் மிதமான மழை மட்டுமே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பொறுத்தவரையில் வானம் மூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் அனேக பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், ஓரிரு பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் நேற்று இரவு முதலே மிதமான மழை பதிவாகி வருகிறது.