ஆறே நாட்களில் ‘தித்வா புயல்’ தந்த மழை எவ்வளவு தெரியுமா? பிரதீப் ஜான் தந்த ஷாக் தகவல்..
Cyclone Ditwah 2025: வட சென்னையில் நாம் காலத்திற்கு நினைவில் கொள்ளும் வகையில், குறுகிய நாட்களில் அதிகளவு மழைப்பொழிவை தித்வா புயல் தந்துச் சென்றதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். தென் சென்னையிலும் 6 நாட்களில் இதுபோதுமான மழை தான் என்று கூறியுள்ளார்.

கோப்புப் படம்
சென்னை, டிசம்பர் 07: தித்வா புயல் எதிரொலியாக தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பதிவானது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் கன மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக இந்த வாரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டன. இந்த ஆண்டில் அதிகபட்ச மழையை தித்வா தந்துச்சென்றது என்று கூறும் அளவுக்கு ஆண்டு இறுதியில் வந்து, சென்னைக்கு தேவையான மழையை அளித்துச்சென்றுள்ளது. குறிப்பாக, மத்திய சென்னை, தென் சென்னைகளில் இந்த புயலால் பெரும் சேதம் ஏற்படவில்லை.
மேலும் படிக்க: விஜய்யுடன் காங்கிரஸ் மூத்த நிர்வாகி பேச்சுவார்த்தை.. தமிழக அரசியலில் பரபரப்பு!!
பாதிப்பை சந்தித்த வடசென்னை:
ஆனால், வட சென்னையில் வீடுகளிலும், சாலைகளிலும் தண்ணீர் தேங்கி பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியது. தற்போது வரை தாழ்வான பகுதிகளில் தண்ணீரை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. அந்தளவுக்கு, வட சென்னை 5 நாட்கள் பெய்த கனமழையால் கடும் பாதிப்பை சந்தித்தது.
அதே சமயம், தித்வா புயலின் காரணமாக டெல்டா மாவட்டங்களிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏக்கக்கணக்கான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்த மாவட்டங்களில் சுமார் 23 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.
‘தித்வா புயல்’ தந்த மழை எவ்வளவு?
How much did Ditwah give rainfall across KTCC region wise in the last 6 days ? A special data compilation from TWM.
========================
North Chennai 400 – 700 mm rainfall
Tiruvallur 200 – 500 mm rainfall
Central Chennai 250-350 mm rainfall
South Chennai 200-300 mm rainfall… pic.twitter.com/Qm63KhD4Jf— Tamil Nadu Weatherman (@praddy06) December 6, 2025
இந்நிலையில், ஆறு நாட்களில் ‘தித்வா புயல்’ தந்த மழை எவ்வளவு என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் அளித்துள்ளார். அதில், வட சென்னையில் 400 – 700 மி.மீ, திருவள்ளூர் 200 – 500 மி.மீ, மத்திய சென்னை 250 – 350 மி.மீ, தென் சென்னை 200 -300 மி.மீ, மேற்கு சென்னை 200 – 250 மி.மீ, செங்கல்பட்டு 100 – 250 மி.மீ, காஞ்சிபுரம் 100 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக கூறியுள்ளார்.
வட சென்னையில் நாம் காலத்திற்கு நினைவில் கொள்ளும் வகையில், குறுகிய நாட்களில் அதிகளவு மழைப்பொழிவை தித்வா புயல் தந்துச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார். தென் சென்னையிலும் 6 நாட்களில் இதுபோதுமான மழை தான். கிட்டதட்ட 3 நாட்கள் சென்னை கடற்கரையில் புயல் நிலைகொண்டதன் மூலம், நினைவில் கொள்ளும் வகையில், நிலத்தடி நீருக்கு தேவையான நல்ல மழை கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முந்தைய புயல்கள் தந்த மழை எவ்வளவு?
அதேசமயம், மத்திய சென்னையில் இதற்கு முன் வந்த புயல்கள் தந்த மழை அளவையும் அவர் பதிவு செய்துள்ளார். அதன்படி, தித்வா புயல் 2025, 2 நாட்களில் 250 மி.மீ மழையை தந்துள்ளது. பெஞ்சல் புயல் 2024ல் 200 மி.மீ மழையை 2 நாட்களில் தந்துச்சென்றது. மமிக்ஜாம் புயல் 2023ல் 400 மி.மீ மழையை ஒரே நாளில் தந்துச்சென்றது. மாண்டஸ் புயல் 2022ல் 150 மி.மீ மழையை ஒரே நாளில் தந்தது. நிவார் புயல் 2020ல் 300 மி.மீ மழையை 2 நாட்களில் தந்தது. வர்தா புயல் 2016ல் 100 மி.மீ மழையை தந்துச்சென்றது. நிலாம் புயல் 2012ல் 100 மி.மீ மழையை ஒரே நாளில் தந்தது. தானே புயல் 2011ல் 100 மி.மீ மழையை ஒரே நாளில் தந்தது. ஜல் புயல் 2010ல் 75 மி.மீ மழையை ஒரே நாளில் தந்தது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: விஜய்யின் பொதுக்கூட்டம் எப்போ தெரியுமா? அனுமதி கேட்டு தவெக சார்பில் விண்ணப்பம்
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை:
இந்த சூழ்நிலையில், தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமெடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையங்கள் கூறிகின்றன. குறிப்பாக இதனால் தென் மாட்டங்களில் தான் மழை அதிகளவில் பெய்து வருகிறது. அதோடு, தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.