விஜய்க்கு ஆதரவு குரல் எழுப்பிய காங்., தலைவர்கள்.. ‘ஜனநாயகன்’ பட வழக்கில் இன்று தீர்ப்பு!!
Congress leaders support vijay: தமிழ் சினிமாவை ஒடுக்குவதன் மூலம் தமிழ் கலாசாரத்தையும், பெருமையையும் அவமதிக்க முயலாதீர்கள் என ராகுல் காந்தி மெர்சல் பட சிக்கலில் கருத்து தெரிவித்ததை நினைவு கூர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் விஜய்க்கு ஆதரவாக ஜனநாயகன் பட சர்ச்சையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜனநாயகன் பட வழக்கில் இன்று தீர்ப்பு
சென்னை, ஜனவரி 09: தணிக்கை சான்று சிக்கல் காரணமாக விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் திட்டமிட்டபடி இன்று (ஜனவரி 9) வெளியாக முடியாமல் போனது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் அவர், அரசியல் வருகையை அறிவித்து தனது கடைசி படமாக ஜனநாயகன் இருக்கும் என்று கூறிய நிலையில், அந்த படம் வெளியாவதவில் சிக்கல் ஏற்பட்டது ரசிகர்களை மட்டுமன்று, அரசியல் வட்டாரத்தையும் கலக்கத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து, பட வெளியீடு தடுக்கப்பட்டதற்கு மத்திய அரசே காரணம் என்று ரசிகர்கள், எதிர்கட்சி அரசியல் தலைவர்களும் குற்றம் சாட்டுகின்றனர். அந்தவகையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.
மேலும் படிக்க: அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவுக்கு நோ.. கூட்டணியில் டிடிவி? மறுக்காத இபிஎஸ்!!
காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவு குரல்:
தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும், கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவருமான கிரிஷ் சோடாங்கர், ‘ஜனநாயகன்’ தணிக்கை பிரச்சனை அரசியல் அதிகார துஷ்பிரயோகம் எனப் புலப்படுவதாகவும், கருத்து வேறுபாடு நியாயமானது, ஆனால் படைப்பை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. கலை மற்றும் பொழுதுபோக்கை அரசியல் போரில் ஆயுதமாக மாற்ற வேண்டாம் தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள், ரசிகர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மோடி அரசு கலை உலகத்திலிருந்து அரசியலை கைவிட்டு விலக வேண்டும். விஜயை ஒரு நடிகராக அல்ல; அரசியல்வாதியாக எதிர்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி, ராகுல் காந்தி 2017 ஆம் ஆண்டு ‘மெர்சல்’ பட சர்ச்சையில் தெரிவித்த எச்சரிக்கையை நினைவு கூர்ந்து, தமிழ் சினிமாவை ஒடுக்குவதன் மூலம் தமிழ் கலாசாரத்தையும், பெருமையையும் அவமதிக்க முயலாதீர்கள் என ராகுல் காந்தி அப்போது கூறினார்; இன்று கூட அதே செயல் மீண்டும் நடக்கிறது என்று குற்றம் சாட்டினார். இதேபோல், காங்கிரஸ் எம்.பிக்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரும் விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.
திமுக காங்கிரஸ் உறுதிபாடு என்ன ஆனது?
காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்தாலும், தவெகவுடன் இணைய வேண்டுமென்று கருத்து வலுப்பெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் கட்சியில் முக்கிய தலைவர்கள் பலர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது திமுக – காங்கிரஸ் கூட்டணியின் உறுதிப்பாட்டை ஆட்டம் காணச் செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: “அன்புமணி யாருடன் கூட்டணி சேர்ந்தாலும், யாரும் அவருக்க ஓட்டு போட மாட்டார்கள்”.. ராமதாஸ் பளார்!!
ஜனநாயகன் பட வழக்கில் இன்று தீர்ப்பு:
இதனிடையே, ஜனநாயகன் படத்தில் ராணுவ படைகளின் இலச்சினையை பயன்படுதியதால், அத்துறை நிபுணரிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். தணிக்கை குழுவில் இடம்பெறாத உறுப்பினர்களைக் கொண்ட ஒரு புதிய குழுவால் ஜனநாயகன் படம் மறு தணிக்கை செய்யப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், படத்திற்காக ரூ.500 கோடி செலவிடப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, திட்டமிட்ட நேரத்தில் வெளியாவதை உறுதி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டுள்ள நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பை அறிவிக்க உள்ளது.