“கோவையில் அரசு குடியிருப்புகளை உள்வாடகைக்கு விட்ட ஊழியர்கள்”.. 25 பேருக்கு அதிரடி நோட்டீஸ்!!
TNHB quarters subletting notice: கோவை கவுண்டம்பாளையத்தில் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை அதிக வாடகைக்கு உள்வாடகைக்கு விட்ட 25 அரசு ஊழியர்களுக்கு வீடுகளைக் காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பழுதடைந்த 150 வீடுகளை உடனடியாகக் காலி செய்யவும் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவை, நவ.05: அரசுப் பணியாளர்களுக்குக் குறைந்த வாடகையில் தங்குமிடம் வழங்கும் நோக்கில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 1,848 வீடுகள் உள்ளன. இங்குப் பணியாற்றும் அரசு ஊழியர்களின் ஊதியச் சான்றுகளுக்கு ஏற்ப ‘ஏ’ டைப் முதல் ‘டி’ டைப் வரை வீடுகள் பிரிக்கப்பட்டு, மாதம் ரூ.2,000 முதல் ரூ.6,850 வரை வாடகையாக அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இங்கு ஒதுக்கீடு பெற்ற அரசு ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளைப் பயன்படுத்தாமல், அதிக வாடகைக்குத் தனிநபர்களுக்கு உள்வாடகைக்கு (Subletting) விட்டு லாபம் அடைவதாகத் தொடர்ச்சியான புகார்கள் எழுந்தன.
இதையும் படிக்க: தீபாவளிக்கு ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள்.. ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு’ விற்பனை தொடக்கம்
வீட்டு வசதி வாரியத்தின் கள ஆய்வு:
பொதுமக்களிடமிருந்தும் நேர்மையான அரசு ஊழியர்களிடமிருந்தும் வந்த புகார்களின் அடிப்படையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கடந்த சில நாட்களாகக் கவுண்டம்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிரடிக் கள ஆய்வை மேற்கொண்டனர். ஒவ்வொரு வீடாக நேரில் சென்று ஆய்வு செய்த அதிகாரிகள், குடியிருப்பாளர்களின் பெயர் விவரங்கள், அடையாளச் சான்றுகள் மற்றும் அவர்கள் எந்த அரசுத் துறையில் பணியாற்றுகிறார்கள் என்ற தகவல்களைத் திரட்டினர். இந்த தீவிர சோதனையின் முடிவில், சுமார் 25 வீடுகளில் அரசாங்கத்தால் ஒதுக்கீடு பெற்ற உண்மையான அரசு ஊழியர்களுக்குப் பதிலாக, முற்றிலும் சம்பந்தமில்லாத வேறு தனிநபர்கள் தங்கியிருந்தது உறுதி செய்யப்பட்டது.
வீடுகள் ஒதுக்கீடு ஆணை ரத்து:
முறைகேடாக வீடுகளை உள்வாடகைக்கு விட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட 25 அரசு ஊழியர்கள் மீது சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். இதன்படி, அந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அரசாங்க வீடு ஒதுக்கீட்டு ஆணையை (Allotment Order) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறித் தங்கியுள்ள நபர்களை உடனடியாக வெளியேற்றவும், வீடுகளைக் காலி செய்து ஒப்படைக்கவும் அறிவுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பிலும் வீட்டு வசதி வாரியம் சார்பிலும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கவின் ஆணவக்கொலை வழக்கு.. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!!
வீடுகளைக் காலி செய்ய 150 பேருக்கு உத்தரவு:
இதனிடையே, கோவையின் முக்கியப் பகுதிகளான ரேஸ்கோர்ஸ் மற்றும் சரவணம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான வீடுகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்டதாலும், தற்போது மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாலும், அங்கு வசிக்கும் அரசு ஊழியர்களின் பாதுகாப்பைக் கருதி வீடுகளைக் காலி செய்ய வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே பலர் வீடுகளைக் காலி செய்துவிட்ட நிலையில், இன்னமும் காலி செய்யாமல் தொடர்ந்து வசித்து வரும் 150 பேருக்கு வீட்டு வசதி வாரியம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் உறுதித்தன்மை குறைந்துவிட்டதால் அசம்பாவிதங்களைத் தவிர்க்க உடனடியாக வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.