ஜூன் 25, 2026: கடந்த சில நாட்களாக சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளை தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று காலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் கிட்டத்தட்ட 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்), கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, நெல்லை மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் என எட்டு போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வருகின்றன.
சென்னையில் காத்திருக்கு 300 பேருந்துகள்:
இதில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தைத் தவிர, எஞ்சியுள்ள ஏழு போக்குவரத்துக் கழகங்களுக்காக கிட்டத்தட்ட 300 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த புதிய பேருந்துகள் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படுவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
மேலும் படிக்க: சீமானிடம் தோளில் கைபோட்டு, சீரியஸாக டிஸ்கஸ் செய்த மு.க.ஸ்டாலின்.. ஒரே சோபாவில் 3 ஜாம்பவான்கள்..
ஜூன் 22-ஆம் தேதி இந்தப் பேருந்துகள் சேவைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக அவை அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் அந்தப் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சென்னையில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்துத் துறையினரிடையே குழப்பமும் ஏமாற்றமும் நிலவியது.
அரசியல் தலைவர்கள் கண்டனம்:
மேலும், 300 புதிய பேருந்துகளும் சேவைக்கு விடப்படாமல் இருப்பதற்கு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வந்தன. ஏற்கனவே போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதிச் சுமை இருப்பதால், இந்த தாமதம் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டது. எனவே, புதிய பேருந்துகளின் சேவையை விரைவாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்தன.
மேலும் படிக்க: மின் துறையில் எவ்வளவு நஷ்டம்? நிதி நிலை என்ன? காலை 10.30 மணிக்கு வெளியாகும் வெள்ளை அறிக்கை..
300 பேருந்துகளின் சேவையை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்:
இந்தச் சூழலில், 300 புதிய பேருந்துகளின் சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று காலை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.