“பல கோடி மக்களின் வாக்குரிமை கேள்விக்குறி” கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
special intensive revision: பீகாரைத் தொடர்ந்து தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவ.4ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஆளும் திமுக அரசு இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Mk Stalin
சென்னை, நவம்பர் 09: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி காரணமாக பல கோடி மக்களின் வாக்குரிமை கேள்விக்குறியாகி உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மேற்கொண்டு வரும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து திமுக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்களுடன், கட்சியின் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்களும் பங்கேற்றனர். அதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து பேசிய ஸ்டாலின், நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார்.
Also read: குடியிருப்பு, வணிக இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் வசதி கட்டாயம்.. தமிழக அரசு உத்தரவு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவம்பர் 4 தொடங்கி டிசம்பர் 4 வரை நடைபெற உள்ளது. அதைதொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9 அன்று வெளியிடப்படும். தொடர்ந்து, ஜனவரி 8, 2026 வரை ஆட்சேபனைகள் மற்றும் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கலாம். இந்த ஆட்சேபனைகள் குறித்த விசாரணைகள் ஜனவரி 31க்குள் முடிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் வரும் நவ.11ம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல், வரும் 11ம் தேதி தேர்தல் ஆணையத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டமும் நடத்துகின்றன. அதேசமயம், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து ஆலோசிக்க, மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை திமுக இன்று நடத்தியது. காணொளி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து மாவட்ட தலைமை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறி:
இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது x பக்கத்தில், தமிழகத்தை எஸ்ஐஆர், ஆபத்து சூழ்ந்துள்ளது. பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறியாகி உள்ளது. நம் மக்களின் ஓட்டுரிமையைப் பாதுகாக்க, கட்சியினர் கண்ணும் கருத்துமாக இருந்து மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும், வரும் 11ம் நாள் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் எஸ்ஐஆர்க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களைக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்திடவும்,இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்களை வழங்கினேன் என்று பதிவிட்டுள்ளார்.
அதோடு, சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் எனும் சதி வலையில் சிக்காமல் நம் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்துவோம், கடமையாற்றுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், SIR படிவத்தை பூர்த்தி செய்வதில் எழும் சந்தேகங்களை தீர்க்க திமுக சார்பில் உதவி எண்ணையும் அவர் அறிவித்துள்ளார்.
முதல்வர் வெளியிட்ட வீடியோ:
S.I.R-ஐ ஏன் எதிர்க்கிறோம்?#SIR குறித்து எதிர்க்கட்சிகள் செய்யும் பரப்புரைக்குப் பதில்!
S.I.R குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு உதவி எண்: 08065420020#தமிழ்நாடு_தலைகுனியாது #தமிழ்நாடு_போராடும் #தமிழ்நாடு_வெல்லும் pic.twitter.com/LPjsNsHJqv
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 9, 2025
SIR-ஐ ஏன் எதிர்க்கிறோம் என்பது குறித்து விளக்கும் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், SIR குறித்து எதிர்க்கட்சிகள் செய்யும் பரப்புரைக்குப் பதிலடியும் கொடுத்துள்ளார்.