வாட்சை பழுதுபார்த்து தராமல் இழுத்தடித்த கடை.. ரூ.15,000 அபராதம் விதித்த குறைதீர் ஆணையம்!

15,000 Rupees Fine For Watch Repair Shop | சென்னையில் சொன்ன தேதிக்கு வாட்சை பழுதுபார்த்து தராத கடை மீது பெண் ஒருவர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்த நிலையில், அந்த வாட்ச் பழுது பார்க்கும் கடைக்கு ரூ.15,000 அபராதம் விதித்து குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாட்சை பழுதுபார்த்து தராமல் இழுத்தடித்த கடை.. ரூ.15,000 அபராதம் விதித்த குறைதீர் ஆணையம்!

மாதிரி புகைப்படம்

Published: 

23 Jun 2025 08:58 AM

சென்னை, ஜூன் 23 : சென்னையில் பழுது பார்க்க கொடுத்த வாட்சை உரிய நேரத்தில் வாடிக்கையாளருக்கு வழங்காததால், வாட்ச் பழுது பார்க்கும் கடைக்கு ரூ. 15,000 அபராதம் விதித்து சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் (North District Consumer Disputes Redressal Commission) உத்தரவிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு பழுது பார்க்க வாட்ச் கொடுத்த நிலையில், அதனை பழுது பார்த்து தராமல் இழுத்தடித்தால் பெண் ஒருவர் வழக்குப்பதிவு செய்த நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

2024-ல் பழுது பார்க்க கொடுத்த வாட்ஸ் – இழுத்தடித்த கடை

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ஸ்வாதி என்ற பெண் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள ஃபாசில் (Fossil) வாட்சை கடையில் பழுது பார்க்க கொடுத்துள்ளார். அந்த வாட்ச் மிகவும் விலை உயர்ந்தது மட்டுமின்றி சுவாதியின் குடும்ப உறுப்பினர்கள் அதனை அவருக்கு பரிசாக வழங்கியதால் அவர் அதனை உணர்வுபூர்வமாக கருதி உள்ளார். சுவாதி 2024 ஆம் ஆண்டு ஒரு வாட்ச் கடையில், தனது 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வாட்சை கொடுத்து பழுது பார்த்து தரும்படி கேட்டுள்ளார். அந்த வாட்சை வாங்கிக் கொண்ட அந்த கடை, 2024 ஜூன் மாதத்தில் பழுது பார்த்து தரப்படும் என உத்திரவாதம் வழங்கியது மட்டுமின்றி சுவாதி இடமிருந்து ஒரு ரூபாய் 2,700 கட்டணம் வசூலித்துள்ளது.

அவர்கள் சொன்ன அதே நாளில், சுவாதி தனது வாட்ச் குறித்து அந்த கடையில் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இன்னும் இரண்டு நாட்களில் சரி செய்து கொடுப்பதாக கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து வாட்சை சரி செய்து கொடுக்காமல் இழுத்து அடித்து வந்துள்ளனர். அந்த பெண் வாட்சை பழுது பார்க்க கொடுத்த ஒரு மாதம் கழித்து, அவருக்கு வாட்ச் குறித்த ஏதோ ஒரு தள்ளுபடி செய்தியை அந்த கடை அனுப்பியுள்ளது. ஆனால் சுவாதி பழுது பார்க்க கொடுத்த வாட்ச் குறித்து அவர்கள் எதுவும் பேசாமல் இருந்துள்ளனர்.

நீண்ட நாட்கள் ஆகியும் அந்த கடை வாட்ச் பழுது பார்த்து கொடுக்காததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுவாதி, ஆகஸ்ட் 2024-ல் இந்த விவகாரம் தொடர்பாக கடைக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதற்கும் அந்த கடை பதில் அளிக்காமல் இருந்துள்ளது. இந்த நிலையில், சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் அந்த பெண் புகார் அளித்துள்ளார். அதில் தனது வாட்ச் பழையபடி தனக்கு திருப்பி வழங்கப்பட வேண்டும் என்றும், இதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த புகாரை விசாரித்து குறைதீர் ஆணையம் சுவாதியின் ரூ.50,000 மதிப்பிள்ள வாட்சை எந்த வித கட்டணமும் வசூலிக்காமல் உடனடியாக பழுது பார்த்து தர வேண்டு என்று கூறியுள்ளது. மேலும் வாட்சை பழுது பார்த்து தராமல் இழுத்தடித்ததற்கு ரூ.10,000 இழப்பீடும், வழக்கு செலவுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.