சென்னை மக்களே.. முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம்.. ரூட் மாறுது!
Chennai Traffic Diversion : சென்னை தேனாம்பேட்டை பகுதியில் 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால், அந்த சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 16 : சென்னை தேனாம்பேட்டை பகுதிகளில் 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் (Chennai Traffic Diversion) செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அண்ணா சாலையில் மேம்பால பணிகள் நடைபெறுவதால், சோதனை அடிப்படையில் சில நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, பீக் ஹவரில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதில், பல்வேறு இடங்களில் மேம்பால பணிகள், சாலை விரிவாக்க பணிகள், மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதற்கிடையில், அவ்வப்போது போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் அண்ணா சாலை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் இருக்கும். அண்ணா சாலையை கடக்க சுமார் 20 நிமிடங்கள் ஆகும். அண்ணா சாலை முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். இதனை தீர்க்கும் வகையில், தமிழக அரசு தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என அறிவித்தது. 3.20 கி.மீ நீளத்துக்கு 14 மீட்டர் அகலம் கொண்ட நான்கு வழித்தட உயர்மட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் 2024ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து, தற்போது கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், தேனாம்பேட்டை அருகே 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அண்ணாசாலையில் உள்ள சைதாப்பேட்டையிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணாசாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி தியாகராய சாலை, மா.போ.சி. சந்திப்பு. வடக்கு போக் சாலை (வலதுபுறம் திரும்பி), விஜயராகவ சாலை சந்திப்பு, விஜயராகவ சாலை வழியாக அண்ணாசாலையை அடையலாம். அண்ணா சாலையிலிருந்து தி.நகர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி தியாகராய சாலை நோக்கிச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
Also Read : அடுத்த 6 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா? வானிலை மையம் அலர்ட்!
தேனாம்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்
🚧 Traffic Diversion Alert 🚧
Due to the construction work for a 3.2 km flyover on Mount Road, traffic diversions will be in place near #Teynampet from 17.08.2025 on a trial basis.#ChennaiTraffic #TrafficUpdate pic.twitter.com/WfuHEGKTu0
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) August 15, 2025
தி.நகரிலிருந்து அண்ணா சாலை நோக்கிச் செல்ல விரும்பும் வாகனங்கள் தியாகராய சாலையில் உள்ள மா.போ.சி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வடக்கு போக் சாலை, விஜயராகவ சாலை வழியாக சென்று அண்ணா சாலையை அடையலாம். அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் விஜயராகவ சாலை நோக்கி வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது.
Also Read : கோயில் கோபுரம் மீது தேசிய கொடியுடன் போராட்டம்.. கீழே இறங்கும் போது உயிரிழந்த சோகம்..
தெற்கு போக் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மா.போ.சி. சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, அவ்வாகனங்கள் நேராக வடக்கு போக் சாலையை நோக்கிச் சென்று பின்னர் விஜயராகவ சாலையை அடைந்து பின்னர் அண்ணா சாலையை அடையலாம்.