சென்னை மெட்ரோ ரயில் பணியின் போது விபத்து.. உயிரிழந்த தொழிலாளி..
Chennai Metro Construction: சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் மும்ரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை செம்மஞ்சேரியில் மெட்ரோ பணியின் போது 30 டன் எடை கொண்ட கான்கிரீட் பாக்ஸ் கீழே விழுந்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்,

சென்னை, ஆகஸ்ட் 15, 2025: சென்னை செம்மஞ்சேரியில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வரும் நிலையில் சுமார் 30 டன் எடை கொண்ட கான்கிரீட் பாக்ஸ் கீழே விழுந்ததில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்ட வருகிறது. ஏற்கனவே சென்னையில் பரங்கிமலை, மீனம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து விம்கோ நகர், சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் விரைவில் பயணம் மேற்கொள்ளவும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் விரிவாக்கம் அதாவது இரண்டாம் கட்ட பணிகள் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் என்பது மூன்று வழித்தடங்களில் நடைபெற்ற வருகிறது.
Also Read: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி.. உணவு பரிமாறிய மேயர் பிரியா..
மெட்ரோ ரயில் பணியின் போது விபத்து:
அந்த வகையில் சென்னை செம்மஞ்சேரியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 15, 2025) தொழிலாளிகள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சுமார் 30 டன் எடை கொண்ட கான்கிரீட் பாக்ஸை இணைக்கக்கூடிய பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது அதனை கிரேன் மூலம் தூக்கிச் சென்றனர். ஆனால் அப்போது எதிர்பாராத விதமாக அந்த கிரீன் பெல்ட் அறுந்து விழவே அந்த 30 டன் எடை கொண்ட கான்கிரீட் பாக்ஸ் கீழே விழுந்துள்ளது.
கான்கிரீட் பாக்ஸ் விழுந்து ஒருவர் உயிரிழப்பு:
அப்போது கான்கிரீட் பாக்ஸ் உடன் சென்ற இரண்டு தொழிலாளர்களும் கீழே விழுந்தனர். இதில் ஜார்க்கண்டை சேர்ந்த விக்கி குமார் பிஸ்வால் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயர்ந்தார். அதே சமயம் மற்றொரு தொழிலாளி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து செம்மஞ்சேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: கூட்டணியை விட்டு வெளியேற முடியுமா? திருமாவளவனுக்கு சவால் விட்ட தமிழிசை சௌந்தரராஜன்!
ராமாபுரத்தில் ஏற்பட்ட விபத்து:
முன்னதாக சென்னையில் ராமாபுரத்தில் இருக்கக்கூடிய மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது 2025 ஜூன் 12-ம் தேதி விபத்து ஏற்பட்டது. அதாவது மெட்ரோ ரயிலுக்கான மேம்பாலம் கட்டுமான பணியின் போது மேம்பாலத்தின் தூண்களுக்கு இடையே வைக்கக்கூடிய இரண்டு குறுக்கு தூண்கள் சரிந்து விழுந்தன. அப்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவர் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மெட்ரோ ரயில் பணியின்போது தொடர் அசம்பாவிதங்கள் நடைபெற்று வரும் நிலையில் மக்கள் இடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.