இந்தியா – பாகிஸ்தான் போட்டி எதிரொலி – இலங்கைக்கு விமான கட்டணம் பலமடங்கு உயர்வு – எவ்வளவு தெரியுமா?
IND vs PAK Impact : ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் பிப்ரவரி 15, 2026 அன்று இலங்கையில் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு சென்னை - இலங்கை இடையே விமான கட்டணம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு விமான கட்டணம் உயர்வு
சென்னை, பிப்ரவரி 12 : டி20 உலகக்கோப்பை (T20 World Cup) கிரிக்கெட் போட்டிகள் கடந்த பிப்ரவரி 7, 2026 அன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வருகிற பிப்ரவரி 15, 2026 அன்று இலங்கையில் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் ரசிகர்கள் அதிக அளவில் விமான டிக்கெட் புக் செய்து வரும் நிலையில் போட்டிக்கான, டிமாண்ட் காரணமாக விமான டிக்கெட் கட்டணம் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டிக்கு இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், நாட்கள் நெருங்க, நெருங்க விமான டிக்கெட் கட்டணம் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இது இந்தியா – பாகிஸ்தான் போட்டியை நேரில் காண வேண்டும் என்ற ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை – இலங்கை விமான கட்டணம் பன்மடங்கு உயர்வு
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு தினமும் 8 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதே போல இலங்கை வழியாக கனெக்டிங் விமான சேவைகள் செய்லபடுவதால், சென்னையில் இருந்து இலங்கை செல்லும் விமானகள் எண்ணிக்கை வழக்கமாகவே அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய ரசிகர்கள் பலர் போட்டிகளை நேரில் காண இலங்கைக்கு பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் போட்டி கொழும்புவில் பிப்ரவரி 15, 2026 அன்று நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் டிக்கெட் முன்பதிவு வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளன.
இதையும் படிக்க : குடும்பத்தையே சீர்குலைத்த புற்றுநோய்.. மனைவி மீதான அதீத பாசத்தால் விபரீத முடிவு.. தந்தை, மகன் பலி!!
கட்டணம் எவ்வளவு உயர்ந்துள்ளது?
சாதாரண நாட்களில் சென்னை – இலங்கை இடையே விமான கட்டணம் ரூ.7,127 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகிற பிப்ரவரி 13, 2026 அன்று இண்டிகோ விமானத்தில் எகானமி வகுப்பில் கட்டணமாக ரூ.22,073 முதல் ரூ.25,207 வரை உயர்ந்துள்ளது. அதே போல ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை – இலங்கை கட்டணம் ரூ.42, 231 ஆக உயர்ந்துள்ளது.
அதே போல பிப்ரவரி 14, 2026 அன்று சென்னை – இலங்கைக்கு இண்டிகோ கட்டணம் ரூ.20,708 முதல் ரூ.25, 207 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் அன்றைய தினம் கட்டணமாக ரூ.35, 217 வரை உயர்ந்துள்ளது. அதே போல போட்டி நடைபெறும் பிப்ரவரி 15, 2026 அன்று இண்டிகோ விமான கட்டணம் ரூ.18,283 முதல் ரூ.19,464 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் கட்டணமாக ரூ.18,283 முதல் ரூ.42,231 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ரூ.14 லட்சம் கடன் பெற்று சொகுசு கார்.. சென்னையில் நூதன மோசடியில் ஈடுபட்ட தம்பதி..
மேலும் எகானமி வகுப்பு இருக்கைகள் மிக வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பயணிகள் மிக அதிக கட்டணமுள்ள பிசினஸ் கிளாஸ் இருக்கைகளை முன்பதிவு செய்து வருவதாகவும் இதுவே கட்டண உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், சென்னை மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து இலங்கைக்கு செல்லும் விமானங்களின் கட்டணங்களும் உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.