Weather Update: வடகிழக்கு பருவமழை எப்போது? – பிரதீப் ஜான் வெளியிட்ட தகவல்!
North East Mansoon: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்புப்படி, வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 அன்று தொடங்குகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை
தமிழ்நாடு, அக்டோபர் 14: வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கவுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை 2025 தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலைகள் அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை தொடர்ந்து மழைப்பொழிவை சந்தித்து வருகிறது. வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஈரப்பதம் நிறைந்த கிழக்கு காற்றினால் நகரமும் அதன் புறநகர்ப் பகுதிகளும் இடியுடன் கூடிய மழையையும், லேசானது முதல் மிதமான மழையையும் அனுபவித்து வருகின்றன. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, ஏழு நாள் முன்னறிவிப்பின்படி, இந்த வாரம் முழுவதும் சென்னையின் வானிலையில் ஓரளவு மேகமூட்டமான வானம் மற்றும் இடைவிடாத மழை பெய்யும்.
இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை.. முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தும் தமிழக அரசு!
குறிப்பாக அக்டோபர் 14ஆம் தேதி ஆன இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, திருவாரூர், ஆகிய இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது
பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவு
One more day to go for start of an exciting NE monsoon season.
— Tamil Nadu Weatherman (@praddy06) October 14, 2025
வளிமண்டலத்தில் கிழக்கு திசை காற்று அடுத்த 48 மணி நேரத்தில் வீச தொடங்கும் என்பதால் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நாள் முன்னதாகவே அக்டோபர் 15ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் இல்லையா? வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
எனினும் அக்டோபர் 21ஆம் தேதி வரை ஒரு வாரம் தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தாலும் இது பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி காலம் என்பதால் வியாபாரிகள் சற்று கலக்கமடைந்துள்ளனர்.