தமிழகத்தில் குறையும் வெப்பநிலை.. கனமழை எச்சரிக்கை எத்தனை நாட்களுக்கு? வானிலை ரிப்போர்ட் இதோ..
Tamil Nadu Weather Update: ஜூன் 28ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனக் வானிலை ஆய்வு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் 24, 2026: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெப்பநிலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது வெப்பநிலை கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவான வெப்பநிலை, தற்போது 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, வரவிருக்கும் நாட்களில் வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டியே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்:
மழையைப் பொறுத்தவரை, மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 25-ஆம் தேதியும் இதே நிலை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. 5 பேர் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு!
ஜூன் 26-ஆம் தேதியைப் பொறுத்தவரை, தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 27-ஆம் தேதி கோவை, தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பா?
ஜூன் 28-ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 29-ஆம் தேதி கோவை, தேனி மற்றும் நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய்.. திமுக வெளியில் வேறு உள்ளே வேறு – இந்திய கம்யூனிஸ்ட் காட்டம்..
ஜூன் 30-ஆம் தேதியைப் பொறுத்தவரை, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.