தமிழகத்தில் தொடரும் கனமழை.. வெப்பநிலை எப்படி இருக்கும்? வானிலை சொல்லும் தகவல்..
Tamil Nadu Weather Rain: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 33 டிகிரி செல்சியஸை ஒட்டியே வெப்பநிலை பதிவாகி வருகிறது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், நவம்பர் 10, 2025: வட உள் தமிழக மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழடுக்கச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 11, 2025 தேதியான நாளே திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், நவம்பர் 12, 2025 அன்று நெல்லை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியது. அக்டோபர் மாத இறுதி வரை வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருந்தது. அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 58% வழக்கத்தை விட அதிகமான மழை பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: டெல்லி பிக்-பாஸிற்கு ஆமாம் சாமி போடும் எடப்பாடி பழனிசாமி – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..
தமிழகத்தில் தொடரும் கனமழை:
அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவுகிறது. சில மாவட்டங்களில் மட்டுமே கனமழை பதிவாகி வருகிறது. குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. இந்தச் சூழலில், நவம்பர் 13, 2025 அன்று கோவை, நெல்லை, நீலகிரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மட்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வரக்கூடிய நவம்பர் 16, 2025 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அவ்வப்போது வெப்பச் சலனம் காரணமாக மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்து வரும் காரணத்தினால், அதிகபட்ச வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. தற்போது 33 டிகிரி செல்சியஸை ஒட்டியே வெப்பநிலை பதிவாகி வருகிறது.
மேலும் படிக்க: ‘SIR பணிகளில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பே இல்லை’.. அடித்துச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி!!
24 மணி நேரத்தில் பதிவான மழை:
இது ஒரு பக்கம் இருக்க, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் குழித்துறை (கன்னியாகுமரி) 4 செ.மீ., முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), அடையாமடை (கன்னியாகுமரி), பாம்பன் (ராமநாதபுரம்) தலா 3 செ.மீ., சிற்றாறு-I (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), பெரியகுளம் (தேனி), நெய்யூர் AWS (கன்னியாகுமரி) தலா 2 செ.மீ., குருந்தன்கோடு (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), சிவலோகம் (சிற்றாறு-II) (கன்னியாகுமரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), குளச்சல் (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), பாலமோர் (கன்னியாகுமரி) தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.