டிசம்பர் மாத இறுதிக்குள் சென்னையில் குடிநீர் மீட்டர் பொருத்தம்.. இதன் பயன்பாடும் முக்கிய அம்சங்களும் என்ன?
Smart Meter: சென்னையில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிநீர் மீட்டர் பொருத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. குடிநீர் பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணங்கள் வசூலிக்கப்படும் என குடிநீர் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் கசிவு இருந்தாலும் தகவல் தெரிவிக்கப்படும்.

கோப்பு புகைப்படம்
சென்னை, நவம்பர் 22, 2025: சென்னையில் 2025 டிசம்பர் மாதத்திற்குள் குடிநீர் மீட்டர்கள் பொருத்தப்படும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. தண்ணீர் பயன்பாடு மற்றும் தண்ணீர் வீணாவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் இங்கே வேலைக்காக வருகை தருவதால் தண்ணீர் தேவையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நகரின் பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
சென்னையில் அதிகரிக்கும் குடிநீர் தேவை:
அடுக்குமாடி குடியிருப்புகள் பெரும்பாலும் 100 முதல் 200 வீடுகள் கொண்டதாக அமைக்கப்படுவதால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் தண்ணீர் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், குடிநீர் விநியோகம் மற்றும் பயன்பாட்டை நேரடியாக கண்காணிக்கும் வகையில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: விஜய் எடுத்த அதிரடி முடிவு.. நாளை காஞ்சிபுரத்தில் மக்களை சந்திக்கிறார்!!
ஸ்மார்ட் மீட்டர் திட்டம்:
இந்த மீட்டர்கள் மூலம் நுகர்வோர் எந்த அளவு தண்ணீரை பயன்படுத்துகின்றனர் என்பது தெளிவாகத் தெரிய வரும். மேலும், நுகர்வோரின் மொபைல் எண்ணிற்கு துல்லியமான கட்டண விவரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். தண்ணீர் கசிவு கண்டறிதல், தண்ணீர் வீணாவதைத் தடுக்குதல், எதிர்பாராத கட்டணங்களை தவிர்த்தல் ஆகியவற்றுக்கும் இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாத இறுதிக்குள் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அமலுக்கு வரும்:
முதலில் இந்த திட்டம் 2400 சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்புகளில் அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்காக ஒரு லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், 2025 டிசம்பர் மாதத்திற்குள் இந்தப் பணிகள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பொய்த்து போனதா வடகிழக்கு பருவமழை? இதுவரை இல்லாத அளவு குறைந்த மழை பதிவு – வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன தகவல்..
தண்ணீர் பயன்பாட்டை கண்காணிக்க புதிய முயற்சி:
முதல் கட்டமாக சென்னையில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிநீர் மீட்டர் பொருத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. குடிநீர் பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்றும், அடுக்குமாடி குடியிருப்புகளில் வாகனங்களை கழுவுதல் அல்லது தோட்டங்களுக்கு குடிநீரை வீணாக்குவது போன்ற செயல்களைத் தடுக்க இந்த நடவடிக்கை உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் மீட்டர்கள் அமைப்பதால் மக்களிடையே தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.