சென்னையில் ரூ.70.37 கோடியில் புதிய நடைபாதைகள்…6 மண்டலங்களில் அமைக்கப்படுகிறது..எங்கெல்லாம் தெரியுமா!
Chennai Footpaths: சென்னை பெருநகர சென்ன மாநகராட்சி சார்பில் ரூ.70.37 கோடி மதிப்பீட்டில் 6 மண்டங்களில் நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் 6 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடைபாதைகள் மூலம் பொது மக்கள் நடை பயிற்சி மேற்கொள்ள பயன்படுத்தலாம்.

சென்னையில் நடைபாதைகள் அமைக்கும் பணி
சென்னை மாநகராட்சியின் நடைபாதை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், ரூ.70.37 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்த மற்றும் பழமையான நடைபாதைகளை புனரமைத்து புதிய நடைபாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், 4, 5, 6, 7, 8 மற்றும் 13 ஆகிய 6 மண்டலங்களின் எல்லைக்குள் வரும் அண்ணா நகர், எம் எம் டி ஏ காலனி, பெசன்ட் நகர், இந்திரா நகர், கத்திப்பாரா, சாஸ்திரி நகர் பகுதிகள் மற்றும் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு சென்னையில் உள்ள குடியிருப்பு வீதிகள், உள்புற சாலைகள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்கள் ஆகியவற்றில் புதிய நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த பகுதிகளில் சேதமடைந்த நடை பாதைகளை பேட்ச் வொர்க் செய்யாமல், முழுமையாக அகற்றப்பட்டு புதிதாக நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளன. இதில், சேதம் அடைந்த நடைபாதைகள் அகற்றப்பட்டு, புதிய அடித்தள அடுக்குகளை தயாரித்து கான்கிரீட் நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளன.
பொது மக்கள் மத்தியில் எழுந்த கோரிக்கை
சென்னையில் பல்வேறு இடங்களில் நடை பாதைகள் சீரற்ற முறை இருந்தது, அதன் மேல் பூசப்பட்டிருந்த சிமெண்ட் பூச்சுகள் ஆகியவை தேய்மானம் அடைந்ததுடன், பெயர்ந்து காணப்பட்டன. இதனால், பொது மக்கள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். எனவே, இந்த நடை பாதைகளை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்து கோரிக்கை எழுந்தது. அதன்படி, சேதமடைந்த நடை பாதைகளை சீரமைக்கும் வகையில் தற்போது இந்த புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
முழு வீச்சில் நடைபெறும் நடைபாதை பணிகள்
இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதசாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள நடை பாதைகளில் பொல்லார்டுகள் மற்றும் மற்றும் விளிம்பு தடுப்புகளுடன் புதிய நடைபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், தெருக்களின் பெயர்கள் உள்ளிட்டவற்றை குறிப்பிடும் போர்டுகள் ஆகியவற்றை நிறுவப்பட உள்ளது. இந்தப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட உள்ளது.
6 மாதங்களில் பணிகளை முடிக்க இலக்கு
இந்தப் பணிகள் ஒப்படைக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நகரின் பிற பகுதிகளிலும் இது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பாதசாரிகளின் பாதுகாப்பு, மாற்றுத்திறனாளிகள் பயன்பாடு மற்றும் மேம்பட்ட நகர்ப்புற உள்கட்டமைப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மண்டல அலுவலகங்கள் மற்றும் கள ஆய்வுகளின் உள்ளீடுகளின் அடிப்படையில் இந்த பணிகள் அடையாளம் காணப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கூடுதல் பணிகள் பல்வேறு கட்டங்களாக பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.
மேலும் படிக்க: ரயில் திட்டங்கள் தாமதத்திற்கு தமிழக அரசே காரணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்