சில்லென மாறிய சென்னை.. 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

Tamil Nadu Weather Update: சென்னையில் இரவு நேரங்களில் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக நல்ல மழை பதிவாகி வருகிறது. இந்நிலையில் இன்று அதாவது ஜூலை 21, 2025 தேதியான இன்று 4 மாவட்டங்களில் கனமழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில்லென மாறிய சென்னை.. 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

கோப்பு புகைப்படம்

Published: 

21 Jul 2025 06:57 AM

வானிலை நிலவரம், ஜூலை 21, 2025: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஜூலை 21 2025 தேதியான இன்று தமிழகத்தில் நீலகிரி, தென்காசி, தேனி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, அதேபோல் ஜூலை 22 2025 தேதியான நாளை நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சில்லென மாறிய சென்னை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பதிவாகி வருகிறது. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மட்டுமல்லாமல் கோவை, தேனி, தென்காசி, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பதிவு இருந்தது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிகபட்ச வெப்பநிலை என்பது 35 டிகிரி செல்சியஸ் ஆக இருக்க கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை முதல் இரவு நேரங்களில் நகரில் அநேக பகுதிகளில் மிதமான முதல் கனமழை பதிவாகி வருகிறது. அந்த வகையில் ஜூலை20, 2025 தேதியான நேற்று நள்ளிரவில் நகரின் அனேக பகுதிகளில் மிதமான மழை பதிவானது. ஜூலை மாதம் தொடங்கியது முதல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவான நிலையில் இந்த தொடர் மழையின் காரணமாக வெப்பநிலை படிப்படியாக குறைந்துள்ளது.

மேலும் படிக்க: சென்னையில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் கிடையாது.. சென்னை மாநகராட்சி அறிவிப்பு..

சென்னை ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சோளிங்கநல்லூர், பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், வேளச்சேரி, கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பதிவானது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி நடுவட்டத்தில் பத்து சென்டிமீட்டர் மழை பதிவானது. அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டம் சின்னகல்லாரில் 8 சென்டிமீட்டர் மழை பதிவானது. இது ஒரு பக்கம் இருக்க தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க: முதல்வர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுமா? புதிய செயலி மூலம் அறியலாம்

அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மற்றும் மதுரையில் 36 டிகிரி செல்சியஸ் ஒட்டி வெப்பநிலை பதிவானது. சென்னை பொறுத்த வரையில் அதிகபட்ச வெப்பநிலை என்பது நுங்கம்பாக்கத்தில் 32.8 டிகிரி செல்சியஸ் பதிவானது குறிப்பிடத்தக்கது.